நேரு, இந்திரா காந்தியை தாக்கி பேசி விட்டு அவங்கள காப்பி அடிக்கிறீங்களே மோடி- ராஜ் தாக்கரே கிண்டல்

நேரு, இந்திரா காந்தியை தாக்கி பேசி விட்டு அவங்கள காப்பி அடிக்கிறீங்களே என மோடியை நவ்நிர்மான் சேனை கட்சி தலைவர் ராஜ் தாக்கரே கிண்டல் செய்தார்.

சிவசேனா கட்சியின் நிறுவனர் மறைந்த பால்தாக்கரேவின் மருமகன் ராஜ் தாக்கரே. ஆரம்பத்தில் சிவசேனா கட்சியில்தான் அவர் இருந்தார். பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சிவசேனாவிலிருந்து பிரிந்து நவநிர்மான் சேனை கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். சமீபகாலமாக பிரதமர் மோடியை தாக்கி பேசி வருகிறார்.

தற்போது நடந்து வரும் மக்களவை தேர்தலில் பா.ஜ.வுக்கு எதிராக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த மக்களவை தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.

இருப்பினும் பிரதமர் மோடியை விமர்சனம் செய்வதை மட்டும் ராஜ்தாக்கரே கைவிடவில்லை. தற்போது காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். கோவாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற ராஜ்தாக்கரே பேசியதாவது: நேரு-காந்தி குடும்பத்தில் இருந்து பல பிரதமர்கள் வந்து இருப்பதால் காங்கிரஸ் கட்சியை குடும்ப கட்சி என பிரதமர் நரேந்திர மோடியும், அவரது கட்சியும் தொடர்ந்து தாக்கி வருகிறது.

அந்த குடும்பத்தின் மீது ஊழல் குற்றஞ்சாட்டுக்களை அவர் சுமத்துகிறார். அவர்கள் தங்கள் முன்னேற்றத்தில் பிசியாக இருப்பதாக மோடி கூறுகிறார்.

இப்படி நேரு, இந்திரா காந்தியை தாக்கி பேசி விட்டு அவர்களையே மோடி காப்பி அடிக்கிறார். டெல்லியில் உள்ள நேரு நினைவிடத்தில் நேருவின் முக்கிய வாசகமான “நாட்டு மக்கள் என்னை பிரதமர் என அழைக்க கூடாது. முதல் சேவகன் என்று அழைக்க வேண்டும்” பொறிக்கப்பட்டு இருக்கும். அதனையே கொஞ்சம் மாற்றி பிரதம சேவகன் என்று மோடி கூறுகிறார்.நேரு, இந்திரா காந்தியை தொடர்ந்து நீங்கள் (மோடி) தாக்கி பேசி வருகிறீர்கள். ஆனால் அவர்களை நீங்கள் காப்பி அடிக்கிறீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

More News >>