பாலினப் பாகுபாடு காட்டும் தேசிய கீதம்: மாற்றி அமைக்கும் அரசாங்கம்
தேசிய கீதத்தில் பாலினப் பாகுபாடு காட்டுவது போல் இருக்கும் ஒரு வார்த்தைக்காக தங்கள் தேசிய கீதத்தையே மாற்றி அமைக்க கனடா அரசு முடிவு செய்துள்ளது.
சர்வதேச அளவில் பல புதிய மாற்றங்களையும், வேற்றுமை மறந்த சமத்துவத்தையும் பேணும் முக்கிய நாடாக கனடா கருதப்படுகிறது. அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடேவும் பல தரப்பு மக்களையும் இணைத்து சம உரிமை வழங்குவதில் அக்கறை செலுத்தி வருகிறார். பொங்கல் பண்டிகையிலிருந்து கனடாவின் புத்தாண்டு வரை அனைத்துப் பண்டிகைகளுக்கு சம அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அரசாங்கமே அப்பண்டிகைகளை தன் மக்களுடன் இணைந்து கொண்டாடும்.
மாற்றங்களை வேறுபாடுகள் இன்றி ஏற்றுக்கொள்ளும் கனடா தற்போது தன் தேசிய கீதத்தில் ஆண்- பெண் பேதமின்றி சம உரிமை அளிப்பதாக இருக்க வேண்டும் என்பதற்காக மாற்றி அமைக்க உள்ளது. இதன்படி கனடா தேசிய கீதத்தில் உள்ள sons ’சன்ஸ்’ என்ற வார்த்தையை மாற்றி ‘ஆல் ஆஃப் அஸ்’ (all of us) என அமைத்துள்ளனர்.
இதற்கான சட்ட திருத்த மசோதா கனடா நாடாளுமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அடுத்ததாக கனடா கவர்னர் ஜெனரலின் ஒப்புதலுக்குப் பின்னர் அதிகாரப்பூர்வமாக மாற்றி அமைக்கப்பட்ட தேசிய கீதம் இசைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.