நடிகரும் முன்னாள் எம்.பி.,யுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் காலமானார்
நடிகரும் முன்னாள் திமுக எம்.பி.யுமான ஜே.கே. ரித்திஷ் மாரடைப்பால் இன்று காலமானார்.
இலங்கையில் உள்ள கண்டியில் மார்ச் 5, 1973ம் ஆண்டு பிறந்த ரித்திஷுக்கு 46வயதாகிறது. கடைசியாக ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளியாகி ஹிட்டான எல்.கே.ஜி. படத்தில் ராமராஜ் பாண்டியன் கதாபாத்திரத்தில் ரித்திஷ் நடித்திருந்தார்.
நடிகராக இருந்த ரித்திஷ், 2009-ம் ஆண்டு நடைபெற்ற 15வது மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்று எம்.பி ஆனார். பின்னர், 2014ம் ஆண்டு ஏப்ரல் 10-ல் அதிமுகவில் கட்சி உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார்.
நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவுடன் இருந்து வந்த ரித்திஷ், நடிப்பு மற்றும் அரசியலில் அவ்வளவாக தலையிடாமல் இருந்தார். சமீபத்தில் வெளியான எல்.கே.ஜி படத்தில் ராமராஜ் பாண்டியனாக நடித்திருந்தார். இந்நிலையில், இன்று ஏப்ரல் 13ம் தேதி ராமநாதபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரித்திஷ் மாரடைப்பால் காலமானார்.
அவரது மறைவுக்கு திரைத்துறையினர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.