என்னை அவருடன் பார்த்ததுண்டா? போட்டோ வெளியே வந்துருக்கா? ராகுல் விளாசல்
22 லட்சம் அரசாங்கப் பணியிடங்கள் காலியாக உள்ளதாக பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான ஆயுத்த பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதனையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன் வகையில், கர்நாடகாவில் இன்று பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, ’45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அரசாங்க பணிகளில் 22 லட்சம் வேலை இடங்கள் காலியாக உள்ளன. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக காலியிடங்கள் நிரப்பப்படும். வேலை வாய்ப்புகள் அதிகரிக்கப்படும்’ என்றவர்,
கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தவுடன் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறினோம். அதன்படியே கடன் ரத்து செய்யப்பட்டது. மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், பஞ்சாப் எல்லா இடங்களிலும் நாங்கள் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளோம்’ எனக் குறிப்பிட்டுப் பேசினார்.
பின், பிரதமர் மோடி அம்பானியைக் கட்டி தழுவியது போன்ற புகைப்படங்கள் வெளிவருவதை நாம் பார்த்திருப்போம்; ஆனால், என்றாவது நான் அம்பானியைக் கட்டி தழுவியது போன்ற புகைப்படத்தை நீங்கள் பார்த்ததுண்டா? மோடி பத்து, பதினைந்து பேருக்காகத் தான் வேலை செய்கிறார். ஆனால் நான் அப்படி இல்லை. நான் காவலாளி இல்லை என்றும் ஒருபோதும் அவ்வாறு இருக்க மாட்டேன் எனக் கூட்டத்தில் பேசினார்.