தோனி பாணியை பின்பற்றிய கோலி.. முதல் வெற்றியை பதிவு செய்த ஆர்சிபி!
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி ஆர்சிபி அணிக்கு சிறப்பாக அமையவில்லை. தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வியை தழுவி கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில், நேற்றைய போட்டியில் பஞ்சாபை வீழ்த்தி தனது முதல் வெற்றியை ஆர்சிபி பதிவு செய்தது.
டாஸ் வென்ற கேப்டன் கோலி, சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி செய்வது போல முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அந்த இடத்திலேயே பெங்களூரு அணியின் வெற்றி உறுதியானது.
ஆனால், கிறிஸ் கெய்லின் காட்டடி தர்பார் அந்த எண்ணத்தை சிறிது நேரத்தில் ரசிகர்கள் மனதில் தவிடு பொடியாக்கியது. இறுதி வரை ஆட்டமிழக்காமல் 99 ரன்கள் எடுத்தார் கிறிஸ் கெய்ல். ஆனால், அந்த அணியின் மற்ற வீரர்கள் சொதப்பலாக ஆடியதால், பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 173 ரன்களை எடுத்தது.
174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய கேப்டன் கோலி மற்றும் பார்த்திவ் படேல் ஜோடி சிறப்பாக ஆடியது.
9 பந்துகளில் 4 பவுண்டரிகளை விளாசிய பார்த்திவ் படேல் 19 ரன்கள் எடுத்த போது அஸ்வின் பந்துவீச்சில் மயான்க் அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
பின்னர் கோலியுடன் அதிரடி ஆட்டக்காரர் டிவிலியர்ஸ் பார்ட்னர்ஷிப் போட்டு இருவரும் பஞ்சாப் அணியின் பந்துகளை பவுண்டரிகளாக பறக்கவிட்டனர்.
53 பந்துகளில் 8 பவுண்டரிகள் விளாசிய கோலி 67 ரன்கள் அடித்தபோது முகமது ஷமி பந்துவீச்சில் அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
மறு முனையில் 38 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகள் விளாசிய டிவில்லியர்ஸ் 59 ரன்கள் விளாசி பெங்களூரு அணியை வெற்றி பெறச் செய்தார்.
19.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து பெங்களூர் அணி 174 ரன்கள் எடுத்து இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
அதிரடியாக ஆடிய டிவில்லியர்ஸ் ஆட்டநாயகனாக தேர்வானார். இன்னும் மீதமுள்ள 5 போட்டிகளிலும் தொடர்ந்து பெங்களூர் அணி வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை பெறும். கோலி & கோ அந்த மேஜிக்கை செய்யும் என பெங்களூர் அணி ரசிகர்கள் எதிர்பார்த்து உற்சாகமளித்து வருகின்றனர்.