முதுநிலை பட்டம் பெறாமல் எம்.பில் பட்டம் பெற்றது எப்படி? - ராகுல் காந்தி குறித்து கேள்வி எழுப்பும் பாஜக

மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. முதல்கட்ட தேர்தல் வடகிழக்கு மாநிலங்களில் முடிந்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட வாக்குபதிவு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வரும் 18ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவின் மூலம் அவர்களின் உண்மை விவரங்கள் வெளிவருகின்றன.

அந்தவகையில் சமீபத்தில் ஸ்மிருதி இரானி இந்த முறை பி.காம். பார்ட் -1 (மூன்றாண்டு படிப்பு, முடிக்கவில்லை) என்று குறிப்பிட்டிருந்தார் இது சர்ச்சையை ஏற்படுத்தியது. காரணம் கடந்த 2004ம் ஆண்டில் டெல்லியில் உள்ள சாந்தினி சவுக் தொகுதியில் போட்டியிட்ட போது வேட்புமனுவுடன் தாக்கல் செய்த அபிடவிட்டில், தான் பி.ஏ. பட்டதாரி என்று கூறியிருந்தார். இதனை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியிருந்தது.

இந்தநிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பட்டம் பெற்றதில் சந்தேகம் இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். வலைதளங்களில் பேசிய அவர், "தற்போதெல்லாம் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் அனைத்தும் பாஜக தலைவர்களின் கல்வி தகுதி குறித்துத் தான் இருக்கிறது. ஆனால் அவர்கள் ராகுல் காந்தியின் கல்வி தகுதி குறித்து பேச மறுக்கிறார்கள்.

ராகுல் காந்தியின் கல்விச் சான்றுகளை தணிக்கை செய்தால் கிடைக்க வேண்டிய பதில்கள் ஏராளமாக இருப்பதை முற்றிலுமாக மறந்துவிட்டார்கள். இவ்வளவு ஏன், அவர் முதுநிலை பட்டம் பெறாமல் எம்.பில் பட்டம் பெற்றது எப்படி? இந்தியாவின் எதிர்க்கட்சி பிரசாரம் செய்வதற்கான காரணத்தை வாடகைக்கு தேடும் நிலையில் உள்ளது" எனக் கூறியுள்ளார்.

More News >>