பாலகோட் தாக்குதலுக்குப் பின்னும் திருந்தாத பாகிஸ்தான்.... 513 முறை திருப்பி அடித்த இந்தியா

இந்தியாவின் புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதலும் அதனைத் தொடர்ந்து இந்தியா நடத்திய தாக்குதல்குறித்தும் பல்வேறு தகவல்கள் இன்று வரை தொடர்ந்து வெளி வந்துகொண்டே இருக்கின்றன. ஆளும் பா.ஜ.க அரசு, பால்கோட்டில் இந்திய விமானப்படை நடத்திய பதிலடி தாக்குதலில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தது.

இந்திய விமானங்கள், 'ஆளில்லாத பகுதிகளில் குண்டு வீசிச் சென்றன. இதனால், சில மரங்கள் மட்டுமே வேரோடு சாய்ந்தன. மற்றபடி எந்தச் சேதமும் இல்லை. இந்தியா குறிப்பிடுவதுபோன்று, குறிப்பிட்ட அந்த இடத்தில் ஜெயிஷ் - இ - முகமது அமைப்பின் எந்த முகாமும் இல்லை' என்று மறுத்தது. எங்களின் மரங்களை இந்தியா சேதப்படுத்தியதாக ஐ.நா-விலும் புகார் அளித்தது பாகிஸ்தான். இந்த விவகாரம், இந்தியாவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. ஆளும் பா.ஜக அரசு, வேண்டும் என்றே தேர்தல் யுக்தியாக விமானப்படை தாக்குதலை விளம்பரப்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்நிலையில் இந்திய இராணுவத்தின் ஒயிட் நைட் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் பரம்ஜித் சிங் நேற்று ரஜோரி மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பாகிஸ்தான் இராணுவத்தின் அத்துமீறல்கள் குறித்து பேசினார். "பாலகோட் தாக்குதல் நடந்து முடிந்த இந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் எல்லையில் ஏறக்குறைய 513 அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. பீரங்கி குண்டுகள், நவீன துப்பாக்கிகள் போன்ற கனரக ஆயுதங்களை 100 முறைக்கும் மேலாக பயன்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல்களில் நமது தரப்பில் 4 வீரர்கள் உள்பட 10 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். சுமார் 45 பேர் காயமடைந்து உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் தான். இருப்பினும் பாகிஸ்தான் தாக்குதல்கள் அனைத்துக்கும் இந்திய தரப்பில் இருந்து சரியான பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது" எனக் கூறினார்.

More News >>