8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றுவோம் - எடப்பாடி, ராமதாஸ் முன்னிலையில் நிதின் கட்காரி சர்ச்சை பேச்சு

நீதிமன்றம் தடை போட்டாலும், விவசாயிகளை சமாதானம் செய்து சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். அதுவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் ஆகியோரை மேடையில் வைத்துக் கொண்டே நிதின் கட்காரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை - சேலம் இடையேயான எட்டு வழி பசுமைச் சாலை திட்டத்திற்கு விவசாயிகள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல கட்ட போராட்டங்களை நடத்திய விவசாயிகள் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தனர். தற்போது அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவும் இந்தத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கில் கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், இந்தத் திட்டத்தையே ரத்து செய்தது. விவசாயிகளிடம் கைப்பற்றப்பட்ட விளைநிலங்களை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அதிரடி காட்டினர்.

இந்தத் தீர்ப்பால் 8 வழிச்சாலைத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்தத் தீர்ப்புக்கு தாங்கள் போட்ட வழக்கு தான் காரணம் என்று பாமகவும் உரிமை கொண்டாடியது. ஆனால் அதிமுக அரசோ, இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யம் எண்ணத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் தான் சேலத்தில் இன்று நடந்த அதிமுக கூட்டணி பிரச்சார பொதுக் கூட்டத்தில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக தலைவர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நிதின் கட்காரி பேசுகையில், தமிழகத்தின் வளர்ச்சிக்கு சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் மிக முக்கியமானது. இத் திட்டத்திற்கு நீதிமன்றம் தடை போட்டிருந்தாலும் விவசாயிகளுடன் கலந்து பேசி அத்திட்டத்தை நிறைவேற்றுவோம். விவசாயிகளுக்கு கூடுதலாக பணம் கொடுத்தாவது இத்திட்டம் நிறைவேற்றப்படும். விரைவில் அனைத்துப் பிரச்னைகளும் பேசித் தீர்க்கப்படும் என்று நிதின் கட்காரி பேசியது சேலம் பகுதி விவசாயிகளை மட்டுமின்றி ஆளும் கூட்டணியில் உள்ள பாமகவுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயர் நீதிமன்றம் ரத்து செய்த சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்தை, விவசாயிகளுக்கு கூடுதலாக பணம் கொடுத்தாவது நிறைவேற்றுவோம் என்ற நிதின் கட்காரியின் பேச்சுக்கு கடும் கண்டனங்களும், விமர்சனங்களும் எழுந்துள்ளன.

More News >>