வாரணாசியில் மோடியை எதிர்க்கப் போகிறாரா பிரியங்கா - காங்கிரசில் நீடிக்கும் சஸ்பென்ஸ்
உ.பி.யில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகி விட்ட நிலையில், அலகாபாத் மற்றும் பிரதமர் மோடியின் வாரணாசி ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இதனால் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியிடப் போகிறாரா? என்ற சஸ்பென்ஸ் காங்கிரசில் நீடிக்கிறது.
உ.பி.யில் தனித்துப் போட்டியிடும் காங்கிரஸ் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் இதுவரை 71 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. சோனியா, ராகுல் காந்தி போட்டியிடும் ரேபரேலியிலும், அமேதியிலும் சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி வேட்பாளர்களை நிறுத்தாததற்கு பிரதி பலனாக அக்கட்சித் தலைவர்கள் போட்டியிடும் 7 தொகுதிகளில் காங்கிரசும் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.
இந்நிலையில் அலகாபாத் , வாரணாசி ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் காங்கிரஸ் கட்சி இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காமல் உள்ளது. இதற்குக் காரணம் நேரடி அரசியலில் குதித்துள்ள பிரியங்கா காந்தி, தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று காங்கிரசில் ஒரு தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருவது தான் என்று கூறப்படுகிறது. அதிலும் பிரதமர் மோடியை எதிர்த்து பிரியங்காவை நிறுத்தினால் வெற்றி நிச்சயம் என்றும், அவ்வாறு பிரியங்கா போட்டியிட்டால் சமாஜ்வாதி - பகுஜன் கூட்டணியும் ஆதரவு அளிக்கும் என்றும் கூறி பிரியங்காவை சமாதானமும் செய்து வருகின்றனர்.
இதனால் பிரியங்காவை களத்தில் இறக்க காங்கிரஸ் தலைமையும் முடிவு செய்து விட்டாலும், மோடியை எதிர்த்து விஷப்பரீட்சையில் இறக்குவதா ? அல்லது நேரு பிறந்த மண்ணான அலகாபாத் தொகுதியில் சென்டிமெண்டாக நிறுத்தி பிரியங்காவை எளிதில் வெற்றி பெறச் செய்வதா? என்ற இரு விதமான யோசனையில் தான் இரு தொகுதிகளிலும் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காமல் சஸ்பென்ஸை் நீட்டித்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால் பிரியங்கா காந்தி வாரணாசியில் மோடியை எதிர்க்கப் போகிறாரா? என்ற எதிர்பார்ப்பும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடையே அதிகரித்துள்ள நிலையில், இதற்கான விடை இன்னும் ஓரிரு நாளில் தெரிந்துவிடும் .