பிரச்சாரத்திற்கு அனுமதி மறுத்த அதிகாரி - கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி உள்ளிருப்பு போராட்டம்

இறுதிக்கட்ட பிரச்சாரத்திற்கு தாங்கள் கேட்ட இடத்தை, அதிமுக தரப்புக்கு அனுமதி அளித்ததைக் கண்டித்து கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியும், திமுக மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜியும் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் பல மணி நேரமாக உள்ளிருப்பு போராட்டம நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜோதிமணி போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் இருவருக்குமிடையே கடும் போட்டி நிலவுவதால் பிரச்சாரத்தில் அனல் பறக்கிறது.ஜோதிமணிக்கு ஆதரவாக திமுக மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி முழுமூச்சாக தேர்தல் பணிகளை கவனித்து வருகிறார்.

பிரச்சாரம் நாளை மாலையுடன் முடிவடையவுள்ளது. இதனால் இறுதிக்கட்ட பிரச்சாரத்திற்கு கரூர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள திமுக கூட்டணியின் தேர்தல் பணிமனை முன் நடத்த கரூர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியான கோட்டாட்சியர் சரவண மூர்த்தியிடம் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தரப்பில் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் அந்த இடத்தை அதிமுக வேட்பாளருக்கு ஒதுக்கி விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தி அடைந்த திமுக மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி, தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்தில் அமர்ந்து திடீரென காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். முதலில் கேட்ட தங்களுக்கே முன்னுரிமை கொடுத்து அனுமதி வழங்க வேண்டும். ஆளும் கட்சிக்கு சாதகமாக நடப்பதா? என்று கூறி போராட்டத்தை தொடர்ந்தார்.

இதைக் கேள்விப்பட்டு பிரச்சாரத்தில் இருந்த காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியும் விரைந்து வந்து தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் போராட்டத்தில் பங்கேற்றார். 4 மணி நேரத்திற்கும் மேலாக இந்தப் போராட்டம் நீடித்ததால் அங்கு போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்

More News >>