இந்த முறையும் கடைசி ஓவர் பரபரப்பு... சென்னை அணி திரில் வெற்றி ...! முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி

கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இந்த முறையும் கடைசி ஓவர் வரை நீடித்த திக்.. திக்.. ஆட்டத்தில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதல் அணியாக அரையறுதிக்குள் நுழைந்து கெத்து காட்டியுள்ளது.

இந்த ஐபிஎல் சீசனில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆரம்பம் முதலே சூப்பர் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இது வரை நடந்த 8 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. இன்று கொல்கத்தாவுக்கு எதிராக நடந்த போட்டியில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார் தோனி . சென்னை அணியின் சிறப்பான பந்து வீச்சில் கொல்கத்தா அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விழ, கிறிஸ் லின் மட்டும் அதிரடி காட்டி 51 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார். கடைசி 4 ஓவர்களில் ரன் குவிக்க சிரமப்பட்ட கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் மட்டும் சேர்த்தது.

தொடர்ந்து ஆடிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் வாட்சன் (6), டூ பிளசிஸ் (24) ஏமாற்றினர். அடுத்து வந்த ராயுடு(5), ஜாதவ் (20),தோனி (16) அடுத்தடுத்து வீழ, இம்முறை சுரேஷ் ரெய்னா, ஜடேஜா ஜோடி கடைசி கட்டத்தில் கை கொடுத்தனர். இருந்தாலும் கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 24 ரன்கள் தேவை என்ற பரபரப்பான கட்டத்துக்கு சென்றதால் ஆட்டத்தில் டென்ஷன் எகிறியது.

ஆனால்19-வது ஓவரில் அபாரமாக அடுத்தடுத்து 3 பவுண்டரிகளை விளாசினார் ஜடேஜா. இந்த ஓவரில் மட்டும் 16 ரன்கள் எடுக்கப்பட கடைசி ஓவரில் வெற்றிக்கு 8 ரன்கள் என்ற கட்டத்துக்கு வந்தது. முதல் பந்தில் ஜடேஜா பவுண்டரி விளாச 19.4 ஓவரில் 162 ரன்களை சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. ரெய்னா 58 ரன்களுடனும், ஜடேஜா 31 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இந்தவெற்றி மூலம் மொத்தம் 8 போட்டிகளில் 7-ல் வென்றுள்ள சென்னை அணி புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்ததுடன் அரையிறுதிக்கும் முதல் அணியாக காலடி எடுத்து வைத்துள்ளது.

More News >>