வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக மண்ணில் புதைத்து வைத்த ரூ.75 லட்சம்- பறக்கும் படை பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக மண்ணில் புதைத்து வைத்து இருந்த ரூ.75 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தாலும் அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் கண்ணில் மண்ணை தூவி விட்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து வருகின்றன. தேர்தல் ஆணையம் தற்போது பணம் பட்டுவாடா நடைபெறுவதை தடுக்க அதிரடி சோதனை நடத்தி வருகிறது. இந்த பணியில் தேர்தல் பறக்கும் படை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட கருப்பூர் பகுதியில் உள்ள சின்னராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து அங்கு சென்ற தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த தோட்டத்தில் மண்ணில் ரூ.68 லட்சம் புதைத்து வைக்கப்பட்டு இருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர்.

மேலும், இது போன்று உருளைக்குடி அருகே உள்ள தோட்டத்தில் மண்ணில் புதைத்து வைத்திருந்த ரூ.7 லட்சத்தையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் ரூ.75 லட்சம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

More News >>