பா.ஜ.விடமிருந்து நாட்டை காப்பாற்ற என்ன வேண்டுமானாலும் செய்வோம்- அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்
பா.ஜ.விடமிருந்து நாட்டை காப்பாற்ற என்ன வேண்டுமானாலும் செய்வோம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
நம் நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான மக்களவை தேர்தல் கடந்த 11ம் தேதி தொடங்கியது. மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல் மே 19ம் தேதி நிறைவடைகிறது. அந்த மாதம் 23ம் தேதி முடிவுகள் வெளியாகிறது. கடந்த 11ம் தேதி நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவின் போது பல இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இது குறித்து டெல்லியில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடத்தின.
அந்த கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கலந்து கொண்டார். எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நிறைவடைந்தபிறகு அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நம் நாடு தற்போது ஆபத்தான நிலையில் உள்ளது. அதனால் நாட்டை பா.ஜ.விடமிருந்து காப்பாற்ற ஆம் ஆத்மி கட்சி என்ன வேண்டுமானாலும் செய்யும் என்று தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பின்போது, கெஜ்ரிவாலுடன் காங்கிரஸ் தலைவர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி ஆகியோர் உடன் இருந்தனர். அவர்களிடம் டெல்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைப்பீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர்கள் இந்த கேள்வியை அரவிந்த் கெஜ்ரிவாலிடம் கேட்க வேண்டும் என பதில் அளித்தனர்.