என்னை ஹீரோவாக்கி அரசியலில் இழுத்து விடாதீர்கள்- சீமானுக்கு நடிகர் லாரன்ஸ் எச்சரிக்கை
நான் அரசியலில் இன்னும் ஜீரோவாகதான் இருக்கிறேன். என்னை ஹீரோவாக்கி அரசியலில் இழுத்து விடாதீர்கள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் மறைமுகமாக குறிப்பிட்டு நடிகர் ராகவா லாரன்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் இது தொடர்பாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளாவது: வளர்ந்து வருகிற ஒரு அரசியல் தலைவருக்கும், அவரது கட்சியினருக்கும் எனது ஒரு வேண்டுகோள் மற்றும் எச்சரிக்கை. இந்த பதிவு சம்பந்தப்பட்ட அரசியல் தலைவருக்கும், அவரது தொண்டர்களுக்கும் புரிந்தால் மட்டும் போதும்.
3 ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் பேச்சை பாராட்டி நான் போன் செய்து பேசினேன். அதற்கு நீங்களும் என்னிடம் நன்றி தெரிவித்து பேசினீர்கள். ஆனால் 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு போராட்டத்தில் சேவை மனப்பான்மையுடன் கலந்து கொண்டேன். ஆனால் நீங்கள் என்னையும், எனது ரசிகர்களையும் கொச்சைப்படுத்தி பேசினீர்கள். அது முதல் உங்கள் தொண்டர்களும் சமூக வலைதளங்களில் என்னை பற்றி அசிங்கமாக பதிவிடுகிறார்கள். அதனால் எனக்கு கடும் மனஉளைச்சல் ஏற்பட்டது. நான் பொதுநிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது கூட அங்கே வந்து உங்கள் தொண்டர்கள் மிகவும் நாகரீகமற்ற முறையில் பேசுகிறார்கள்.
நான் அதுபற்றி கவலைப்படவில்லை. ஆனால் எனது மாற்றுத்திறனாளி பசங்களுக்கு உங்கள் தொண்டர்கள் தொந்தரவு கொடுத்துள்ளனர். என் மாற்றுத்திறனாளி பசங்க மற்றும் எனது பாசமிகு ரசிகர்களுக்கும் ஏதாவது சிறு தொந்தரவு கொடுத்தாலும் என்னால் தாங்கி கொள்ள முடியாது. அரசியலில் இப்போது கூட நான் ஜீரோவாகத்தான் இருக்கிறேன். அதில் ஹீரோவாக்கி என்னை அரசியலில் இழுத்து விடாதீர்கள். நான் இப்போது உங்கள் பெயரை குறிப்பிடாமல் இருப்பதற்கு காரணம் பயம் இல்லை. என் அறிக்கையால் உங்களுக்கு எந்த பாதிப்பும் வர கூடாது என்பதுதான். இல்லை இதை பிரச்சனையாகத்தான் அணுகுவோம் என்று நீங்கள் முடிவெடுத்தால் அதற்கும் நான் தயார். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.