200 பேருக்கு 2 தொகுதிகளில் ஓட்டு- அலட்சியம் காட்டும் தேர்தல் அதிகாரிகள்..
தமிழக கேரள எல்லை பகுதிகளில் உள்ள வாக்காளர்களில் 200 பேருக்கு 2 தொகுதிகளில் ஓட்டு உள்ளது. ஆனால் இதனை சரிசெய்யாமல் பல ஆண்டுகளாக தேர்தல் அதிகாரிகள் அலட்சியம் செய்து வருகின்றனர்.
குமரி-கேரள எல்லை பகுதியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இரட்டை வாக்காளர்கள் விவகாரம் நீடித்து கொண்டே வருகிறது. ஓரே வாக்காளர்களின் பெயர் கன்னியாகுமரி மக்களவை தொகுதியிலும், திருவனந்தபுரம் மக்களவை தொகுதியிலும் இடம் பெற்று வருகிறது.
உதாரணமாக, தமிழகத்தில் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் 166ம் வாக்குச்சாவடியில் எண் 151 முதல் 155 வரை உள்ள வாக்காளர்கள், பாறசாலை தொகுதி வாக்குச்சாவடி எண் 146ல் வரிசை எண் 657, 660, 662, 663 என்ற வாக்காளர்களாக உள்ளனர். களியக்காவிளை அருகே உள்ள இஞ்சிவிளையில் ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் 30க்கும் மேற்பட்ட இரட்டை வாக்காளர்கள் உள்ளனர்.
தேர்தல் ஆணைய அதிகாரிகள் இரு மாநிலங்கள், மாவட்டங்கள் சார்ந்து ஆலோசனை கூட்டம் நடத்தி 74 பேரை தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளனர். இருப்பினும், பாறசாலை, நெய்யாற்றின்கரை, கோவளம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளிலும் சேர்த்து 200க்கும் மேற்பட்ட இரட்டை வாக்காளர்கள் இன்னும் இருக்கின்றனர்.
கன்னியாகுமரியில் மக்களவை தேர்தல் வரும் வியாழக்கிழமையன்று நடக்க உள்ளது. திருவனந்தபுரம் மக்களவை தேர்தல் நடக்க இன்னும் 9 நாட்கள் உள்ளன. இதனால் அந்த இரண்டு தொகுதியிலும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள இரட்டை வாக்காளர்கள் இரண்டு தொகுதியிலும் ஓட்டு போடுவதற்கு வாய்ப்புள்ளது.