மோடி ஹெலிகாப்டரில் பணம் கொண்டு வந்தாரா? விசாரணை கேட்கும் காங்கிரஸ்

பிரதமர் மோடி வந்த ஹெலிகாப்டரில் வந்து இறக்கப்பட்ட பெட்டியில் என்ன இருந்தது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

17வது மக்களவை தேர்தலை முன்னிட்டு தேசிய அரசியல் தலைவர்கள் நாடு முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடியும் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு கர்நாடகாவில் மோடி பிரசாரம் செய்தார். அப்போது அவர் வந்து இறங்கிய ஹெலிகாப்டரில் இருந்து ஒரு பெரிய பெட்டி இறக்கப்பட்டு அவசர அவசரமாக ஒரு காரில் ஏற்றப்பட்டது. அந்த கார் மோடியின் பாதுகாப்புக்காக வரும் வாகனங்கள் கார் அல்ல.

ஹெலிகாப்டரிலிருந்து இறக்கப்பட்ட பெட்டி அவசர அவசரமாக சம்பந்தம் இல்லாத காரில் ஏற்றப்படும் வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து எதிர்க்கட்சிகள் கர்நாடக தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்துள்ளன.

இந்நிலையில், பிரதமரின் ஹெலிகாப்டரில் இருந்த இறக்கப்பட்ட பெட்டியில் என்ன இருந்தது, அந்த பெட்டி ஏற்றப்பட்ட கார் யாருடையது என்று காங்கிரஸ் தலைமை கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், அந்த பெட்டியில் என்ன இருந்தது என்பது குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும். அந்த பெட்டியில் என்ன பொருட்கள் இருந்தது என்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா வலியுறுத்தினார்.

முன்னதாக அந்த பெட்டியில் பிரதமரின் லேப்டாப் மற்றும் பொருட்கள் இருந்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் விளக்கம் கொடுத்தனர். ஆனால் அவ்வளவு பெரிய பெட்டியிலா அந்த பொருட்கள் கொண்டு வரப்பட்டது என்று கேள்விக்கு அவர்கள் பதில் அளிக்கவில்லை. அதனால் கர்நாடக மாநில காங்கிரசார் அந்த பெட்டியில் பணம் கொண்டு வந்து இருக்கலாம் என சந்தேகத்தை எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

More News >>