எம்.எல்.ஏ விடுதி..! அமைச்சரின் அறை...! நள்ளிரவு சோதனை...! பிடிபட்டது என்ன? ரகசியம் காக்கும் அதிகாரிகள்
சென்னையில் எம்.எல்.ஏ க்கள் தங்கும் விடுதியில் நள்ளிரவில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாரின் அறையை குறிவைத்து நடத்தப்பட்ட இந்தச் சோதனையில் என்ன பிடிபட்டது என்பது பற்றிய தகவல் வெளியிடப்படாமல் ரகசியம் காக்கப்படுவதால் பெரும் சந்தேகம் எழுந்து சர்ச்சை நீடிக்கிறது.
தேர்தலுக்கு இன்னும் மூன்றே நாட்கள் உள்ள நிலையில் ஊரெங்கும் ஓட்டுக்கு பணப்பட்டுவாடா என்பது தான் ஒரே பேச்சாக உள்ளது. கடைசி நிமிடத்தில் வாக்காளர்களின் கைகளில் பணத்தை எப்படியாவது திணித்து ஓட்டுக்களை மடைமாற்ற வேண்டும் என்பதில் தான் பிரதானக் கட்சிகள் அனைத்தும் தீவிரம் காட்டுகின்றன.
இதனால் பட்டுவாடா செய்வதற்காக ஆங்காங்கே பத்திரமாக பதுக்கி வைத்துள்ள பணக்கட்டுகளையும், பரிசுப் பொருட்களையும் வெளியில் எடுக்க ஆரம்பித்துள்ளனர். இவற்றை மோப்பம் பிடிக்கும் எதிர்த்தரப்பினர் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினருக்கும் போட்டுக் கொடுப்பதால் ஆங்காங்கே கோடிக்கணக்கில் பணம் பிடிபடவும் செய்கிறது.
இது போன்ற ஒரு தகவல் தான் நேற்று நள்ளிரவில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள எம்எல்ஏக்கள் விடுதியில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.குறிப்பாக சி பிளாக்கில் உள்ள வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாரின் அறையிலும் அதை ஒட்டியுள்ள 4 அறைகளிலும் குறிவைத்து சோதனை நடத்தினர்.2 மணி நேரத்திற்கும் மேல் சோதனை நடத்தி விட்டு அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். அமைச்சரின் அறையில் என்னென்ன கைப்பற்றப்பட்டது என்பது குறித்து எதுவுமே தெரிவிக்கப்படாமல் ரகசியம் காக்கப்படுவதால் சர்ச்சையாகியுள்ளது.
இந்தத் தேர்தலில் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டி யிடும் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்தை எப்படியாவது வெற்றி பெற வைக்க வேண்டும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கங்கணம் கட்டிக் கொண்டு தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறார். இதற்காக மதுரை புறநகர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பும் சில நாட்களுக்கு முன் உதயக்குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் தேனி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சோழவந்தான், உசிலம்பட்டி தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பு உதயக்குமாரிடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விருதுநகர் மக்களவைத் தொகுதியில், அமைச்சர் உதயக்குமாரின் சொந்த தொகுதியான திருமங்கலம் தொகுதியும் அடங்கும். இதனால் இந்தத் தொகுதிகளில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கான கோடிக்கணக்கான பணம் அமைச்சரின் அறையில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வந்த ரகசிய தகவலை அடுத்தே சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.