முத்தான மூணு படங்களின் டிரெய்லர்... மிஸ் பண்ணியிருந்தா இப்போ பார்த்திடுங்க
ஏப்ரல் 14ஆம் தேதியான தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல திரையுலகில் அறிவிப்புகளும், டிரெய்லர்களும் வெளியானது. அதுகுறித்த முழுமையான தொகுப்பு இதோ...
சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகிவரும் படம் காப்பான். மேகன்லால், ஆர்யா, சாயிஷா உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. இப்படத்தில் மோகன்லால் பிரதமராகவும், சூர்யா உயர்நிலை போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருக்கிறார். ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் டிரெய்லரில் பல வசனங்கள், தற்போதைய அரசியலை சாடியிருக்கிறது. இப்படம் ஆகஸ்ட் 30ல் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
காப்பான் டிரெய்லர் ..
கடந்த 2010ல் இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் வெளியான படம் களவாணி. பிக்பாஸ் புகழ் ஓவியா நாயகியாக அறிமுகமானது இந்தப் படத்தில் தான். விமல், சரண்யா, கஞ்சா கருப்பு, இளவரசு, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் காமெடி அதகளமாக வெளியாகி ஹிட்டானது. இந்தக் கூட்டணியில் உருவாகியிருக்கும் அடுத்த படம் களவாணி 2. ஒன்பது வருடங்கள் கழித்து இரண்டாம் பாகம் தற்பொழுது உருவாகியுள்ளது. முதல் பாகத்தில் காதலை மையமாக கொண்டிருந்தது. இரண்டாம் பாகத்தில் விமல் அரசியல்வாதியாக முயற்சிப்பதே கதைக்களம். “அரசியல்ல நல்லவனுக்கு காலமில்லை, களவாணித்தனம் தான் கை கொடுக்கும்” என்று அரசியல் பரபரப்பில் வெளியாகும் டிரெய்லரிலும் அரசியல் வசனங்களே.
களவாணி 2 டிரெய்லர்..
காமெடியனாக இருக்கும் போது வாரத்திற்கு ஒரு படத்தில் சந்தானத்தை பார்த்துவிடுவோம். கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என உறுதியாக இருக்கும் சந்தானத்துக்கு அடுத்த ரிலீஸ் ஏ1. ராஜ் நாராயணன் இயக்கத்தில் சந்தானம், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். சந்தானத்தின் வழக்கான நக்கல் வசனங்களுடன் வெளியாகியிருக்கிறது இந்த டீஸர். சமீபத்தில் தில்லுக்கு துட்டு 2 படம் வெற்றிபெற, இந்தப் படத்திலும் அதே வெற்றியை தக்கவைக்க திட்டமிட்டிருகிறார் சந்தானம். இப்படத்துக்கு இசை சந்தோஷ்நாராயணன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏ1 டீஸர் :
கனா படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகிவரும் இரண்டாவது படம் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’. யூடியூப்பை கலக்கும் ப்ளாக் ஷீப் டீமைச் சேர்ந்த கார்த்திக் வேணுகோபாலன் இயக்கிவரும் இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார் தொலைக்காட்சி விஜே ரியோ ராஜ். இப்படத்தின் டைட்டில் எப்படி உருவானது என்பதை வீடியோவாக வெளியிட்ட படக்குழு, இந்த முறை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரேக்கிங் நியூஸ் பாணியில் நேற்று வெளியிட்டது. ரியோ, ஆர்.ஜே.விக்னேஷ் லீட் ரோலில் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் நல்ல வரவெற்பை பெற்றது.
செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே., கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படங்களை முடித்துவிட்டநிலையில், சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்துவருகிறார் சூர்யா. இப்படத்துக்கு சூரரைப் போற்று என்று டைட்டில் உறுதியாகியுள்ளது. அப்படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.