ஓட்டு மிஷின்ல விவசாயி சின்னம் தெளிவா இல்ல ...! நாம் தமிழர் கட்சி புலம்பல் - உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
ஓட்டு எந்திரத்தில் ஒட்டப்பட்டுள்ள கரும்பு விவசாயி சின்னம் தெளிவாக இல்லை என்று புகார் கூறி, நாம் தமிழர் கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.
இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகளையும், சின்னஞ் சிறு கட்சிகளையும் பாடாய் படுத்துகிறது தேர்தல் ஆணையம் .அதுவும் சின்னம் ஒதுக்கீடு விவகாரத்திலும் பாகுபாடு காட்டிய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கடும் விமர்சனத்திற்கு ஆளானது.
முதலில் நாம் தமிழர் கட்சியின் இரட்டை மெழுகுவர்த்தி பறிபோனது.விடுதலைச் சிறுத்தைகளின் மோதிரமும் பறிக்கப்பட்டது.தினகரனுக்கு குக்கர் சின்னத்தை கொடுக்க கடைசி வரை பிடிவாதம் பிடித்த தேர்தல் ஆணையம் , கடைசியில் தினகரன் கட்சி வேட்பாளர்களின் பெயர்களில் போட்டியிடும் சுயேட்சைகளின் கையில் திட்டமிட்டு திணித்துவிட்டது.
இப்போது நாம் தமிழர் கட்சிக்கு புதிதாக கொடுக்கப்பட்டுள்ள கரும்பு விவசாயி சின்னத்திலும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம் ஆகியவை அச்சிடப்பட்ட பேப்பர்களை ஒட்டுவது வழக்கம். அப்படி ஒட்டப்பட்ட நாம் தமிழர் கட்சியின் சின்னமான கரும்பு விவசாயி சின்னம் தெளிவாக தெரியும்படி அச்சிடவில்லை என அக்கட்சியினர் புகார் வாசித்தும் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லையாம்.
இதனால் தெளிவாக சின்னம் தெரியும்படி அச்சிட்டு ஓட்டு எந்திரங்களில் பொருத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அவசர வழக்காக விசாரிக்க முறையிடப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றமோ அவசரமாக விசாரிக்க மறுத்து, விசாரணையை வேறு தேதிக்கு ஒத்தி வைத்துவிட்டது.