துலாபாரத்தில் கீழே விழுந்த திராசு! தலையில் பலத்த காயத்துடன் சசி தரூர் மருத்துவமனையில் அனுமதி
துலாபாரத்தின் போது திராசு உடைந்து, தலையில் விழுந்ததால் சசி தரூர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளார்.
கேரளாவில் வரும் 23-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடக்கிறது. இங்கு, திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சசி தரூர் போட்டியிடுகிறார். தேர்தலுக்காக, கேரளாவில் முகாமிட்டுள்ள அவர், தீவிரமாகப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், தம்பானூரில் உள்ள கந்தாரி அம்மன் கோயிலில் தரிசனம் மேற்கொண்ட அவர், எடைக்கு எடை வாழைப்பழம் கொடுத்து துலாபாரம் செய்தார். துலாபாரத் தராசின் ஒரு பக்கத்தில் அவரும் மறுபக்கம் வாழைப்பழங்களும் அடிக்கடி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சசி தரூர் அமர்ந்திருந்த தராசு எதிர்பாராமல் அறுந்து, அவர் தலையின் மேல் கீழே விழுந்தது.
இதனால், பலத்த காயம் அடைந்த அவர் அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தலையில் ஆறு தையல் போடப்பட்டது. தற்போது அவர் நலமாக உள்ளார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து, கேரளா காங்கிரஸ் தலைவர்கள் அவர் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.