நளினிக்கு பரோல் கிடைக்குமா? உயர்நீதிமன்றம் புது உத்தரவு
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியான நளினி, வேலூர் சிறையில் 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகிறார். அவர், லண்டனில் இருக்கும் தனது மகள் ஹரிதாவின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க 6 மாதங்கள் பரோல் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், ‘‘பத்து ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த 3,700 ஆயுள் கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்துள்ளது. மேலும், ஆயுள் கைதிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மாதம் பரோல் வழங்க சிறை விதிகள் இடம் அளிக்கிறது. எனினும், 27 ஆண்டுகளாக எனக்கு பரோல் வழங்கப்படவில்லை.
எனவே, எனது மகள் திருமணத்திற்காக 6 மாதங்கள் பரோல் வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். மேலும், இந்த மனு மீதான விசாரணைக்கு தானே நேரில் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாரயணன் மற்றும் நிர்மல்குமார் அடங்கிய அமர்வு, மனுவுக்கு ஜூன்11ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு கூறி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், நளினிக்கு அவசரமாக பரோல் தேவைப்பட்டால் விடுமுறைகால நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் கூறியுள்ளனர்.