ஆபத்தானது..! ஒதுங்கியே இருந்தேன்..ஆனால்? அரசியலுக்கு வந்த காரணம்..? கமல்ஹாசன்
அரசியலில் உள்ள ஆபத்து, அதன் அசிங்கத்தை உணர்ந்துதான் அரசியலில் ஒதுங்கி இருந்தேன் என நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் வருகிற 18ம் தேதி நடக்கிறது. இந்நிலையில், தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் முடிவடைகிறது. ஆகையால், அரசியல் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரம் செய்து வருகிறார்கள். அதன்படி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் பிரசாரம் செய்து வருகிறார்.
திருச்சியில் மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஆனந்தராஜாவை ஆதரித்து, மத்திய பேருந்து நிலையம் அருகே பிரசாரத்தில் ஈடுபட்டார் கமல்ஹாசன். அப்போது பேசிய அவர், ‘தமிழர்கள் தேசிய நீரோட்டத்தில் கலக்க மாட்டார்கள் என 1980-க்கு பின் வந்தவர்கள் சொல்லிக்கொண்டு வருகிறார்கள். அண்ணா சொன்னதை போன்று தெற்கு தேய்கிறது, அதை தேய்த்து கொண்டே இருக்கிறார்கள் தமிழக அரசியல் தலைவர்கள்.
அரசியலில் உள்ள ஆபத்து, அதன் அசிங்கத்தை உணர்ந்துதான் அரசியலில் ஒதுங்கி இருந்தேன். ஆனால், நதிகள் மாசடைந்து விட்டன. கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் தனியாரிடம் ஒப்படைத்து விட்டது தமிழக அரசு. என் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரவில்லை. மாசடைந்த அரசியல் சுத்தமாக வேண்டும். உங்களுக்காக உயிரைக் கொடுப்பேன் என்று சொல்வதற்குப் பதிலாக, உங்களுக்காக வாக்களிக்கிறோம் என்று சொல்லுங்கள் போதும்’ என்று பேசிய அவர்,
‘தண்ணீர் காசுக்கு விற்கப்படும் நிலைமை முற்றிலுமாக ஒழிக்கப்படும், அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும்’ என்றார்.