ஒரே ஒரு எழுத்தில் உலக சாதனையை தவற விட்ட சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்

சென்னை சென்டரல் ரயில் நிலையம் ஒரே ஒரு எழுத்தில் உலகின் நீளமான பெயர் கொண்ட ரயில் நிலையம் என்னும் பெருமை அல்லது சாதனையை தவறவிட்டது.

20 ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்ட்ரல் ரயில் நிலையம், மெட்ராஸ் ரயில் நிலையம் என்றுதான் அழைக்கப்பட்டு வந்தது. அதன்பிறகு தான் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் என்று மாற்றப்பட்டது. இந்நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பெயர் வைக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் கடந்த 5ம் தேதி முதல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என்று அதிகாரபூர்வமாக மாற்றம் செய்யப்பட்டது. ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்திலும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என்பதை ஆங்கிலத்தில் எழுதினால் (Puratchi Thalaivar Dr. M.G. Ramachandran Central Railway Station) மொத்தம் 57 எழுத்துக்கள் வருகிறது. உலகிலேயே மிக நீளமான பெயர் கொண்ட ரயில் நிலையம் இங்கிலாந்தின் வேல்ஸ் நகரில் உள்ளது. அந்த ரயில் நிலையத்தின் பெயர் ‘Llanfairpwllgwyngyllgogerychwyrndrobwllllantysiliogogogoch’. மொத்தம் 58 எழுத்துக்கள் வருகிறது. ஆக நம்ம சென்ட்ரல் ரயில் நிலையம் ஒரே ஒரு எழுத்தில் உலகின் நீளமான பெயர் கொண்ட ரயில் நிலையம் என்ற பெருமையை தவற விட்டுள்ளது.

தற்போது இந்தியாவின் மிக நீளமான பெயர் கொண்ட ரயில் நிலையம் என்ற பெருமையை சென்ட்ரல் ரயில் நிலையம் தட்டி சென்றுள்ளது. இதற்கு முன் ஆந்திராவில் உள்ள வெங்கட நரசிம்மராஜூவாரிபேட்டா ரயில் நிலையம் (Venkatanarasimharajuvaripeta), இந்தியாவின் மிக நீளமான பெயர் கொண்ட ரயில் நிலையம் என்ற பெருமையை தன் வசம் வைத்து இருந்தது.

More News >>