முடங்கி மீண்ட ஃபேஸ்புக்

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவை ஏறக்குறைய இரண்டரை மணி நேரம் செயல்படாமல் முடங்கிப் போயிருந்தன. பயனர்களின் தொடர் புகாருக்கு பின்னர் கோளாறு சரி செய்யப்பட்டது.

ஏப்ரல் 14ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை கிழக்குப் பிராந்திய நேரத்தின்படி (EST) அதிகாலை ஆறரை மணி (இந்திய நேரம் மாலை 4 மணி) முதல் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகியவற்றின் இயக்கம் தடைபட்டது.

அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதி, ஐரோப்பா மற்றும் பிலிப்பைன்ஸ் பகுதிகளைச் சேர்ந்த பயனர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்பை பயன்படுத்த இயலவில்லை. இதைத் தொடர்ந்து #FacebookDown, #instagramdown மற்றும் #whatsappdown ஆகிய இணைப்புகள் ட்விட்டரில் உலக அளவில் பரவின.

பயனர்களின் புகாரை தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக ஈஎஸ்டி நேரப்படி காலை ஒன்பது மணிக்கு (இந்திய நேரம் மாலை 6:30 மணி - கிரீன்விச் நேரத்திற்கு ஐந்து மணி நேரம் பின்னதான கால நேரம்) இவை மீண்டும் இயங்க ஆரம்பித்தன.

இன்ஸ்டாகிராமை 2012ம் ஆண்டிலும் வாட்ஸ்அப் செயலியை 2014ம் ஆண்டிலும் ஃபேஸ்புக் என்னும் முகநூல் நிறுவனம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் 152 கோடி பயனர்கள் தினசரி ஃபேஸ்புக்கில் செயல்பட்டு வருகின்றனர்.

More News >>