யப்பா... என்ன வெயில்...! என்ன சாப்பிடலாம்?
வெயில் மண்டையை பிளப்பதுபோல் கொளுத்தும் மாதம் இது. வெளியில் போய்விட்டு வந்ததுமே ஃபிரிட்ஜ்ஜை திறந்து மடக் மடக்கென்று ஐஸ்வாட்டரை குடிக்கவேண்டும் என்ற வேட்கை அனைவருக்குமே இருக்கும். வெயிலில் அலைந்துவிட்டு வந்து ஜில்லென்று தண்ணீரையோ, கூல்டிரிங்ஸையோ குடிப்பது உடல் நலத்துக்கு கேட்டை விளைவிக்கும். உடல் சூடாக இருக்கும்போது திடீரென குளிர்ந்த பானம் உள்ளே செல்வது, உடலின் இயக்கத்தில் பாதிப்பை உண்டுபண்ணும். ஆகவே, கோடைக்காலத்திற்கு என்று சில உணவுமுறைகள் உள்ளன. அவற்றை கைக்கொள்ளலாம்.
அதிகம் நீர் பருகுங்கள்: கடுங்கோடையில் நம் உடல் போதுமான அளவுக்கு வியர்க்கவில்லையென்றால், உடல்நல பாதிப்பு உருவாகும். வியர்வை வெளிவரவேண்டுமானால் உடலுக்குள் போதிய அளவு நீர் இருக்கவேண்டும். ஆகவே, தாகம் எடுத்தாலும் இல்லையென்றாலும் கோடைக்காலத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் நீர் அருந்தவேண்டும். அது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.
நீர்ச்சத்து உள்ள உணவு: பழங்கள் மற்றும் காய்கறிகள் எளிதில் செரிக்கக்கூடியன. அவற்றில் நீரின் அளவும் அதிகமாக இருக்கும். ஆகவே, கோடைக்காலத்தில் அதிகம் பழம் உண்பது நல்லது. பொறித்த உணவு மற்றும் நொறுக்குத் தீனிகளை சாப்பிட்டால் அவை செரிப்பதற்கு அதிக நேரம் பிடிக்கும். அதற்காக அதிக அளவு நீரும் தேவைப்படும். ஸ்பைஸி என்னும் மணமூட்டிகள் நிறைந்த உணவு செரிக்கும்போது உடல் சூட்டை அதிகப்படுத்தும். ஆகவே, அவற்றை தவிர்த்து இயற்கையான பழங்கள், காய்கறிகளை அதிகம் உண்ணவேண்டும். வெள்ளரி, தக்காளி, காரட், பசலை கீரை ஆகியவற்றை அதிகம் சாப்பிடவேண்டும்.
இயற்கை குளிர்பானங்கள்: செயற்கை குளிர்பானங்கள் அல்லது காஃபி போன்றவற்றை அருந்துவதற்குப் பதிலாக, இளநீர், எலுமிச்சை சாறு, மோர் மற்றும் கரும்பு சாறு இவற்றை அருந்த வேண்டும். செயற்கை குளிர்பானங்களில் அதிகஅளவு சர்க்கரை மற்றும் பதப்படுத்தும் பொருள்கள் கலந்திருப்பதால் அவற்றை தவிர்த்துவிடுங்கள். அருந்தும் பானங்களில் துளசி விதைகளை சேர்த்தால் குளுமையாக இருக்கும்.
காலை உணவாக இரண்டு அல்லது மூன்று பழங்கள் சாப்பிடலாம். இது வயிற்றில் உள்ள அமிலதன்மையை குறைக்கும். முற்பகலில் ஒரு தம்ளர் மோர் அல்லது இளநீர் பருகலாம். மதிய உணவாக சாலட் உடன் காய்கறி பசிக்கு ஏற்றாற்போன்று கொஞ்சம் சாதம் சாப்பிடலாம். மாலை வேளையில் பழங்களுடன் கூடிய யோகர்ட் (நிலைப்படுத்தப்பட்ட தயிர்) மற்றும் பழங்கள் அடங்கிய பானம் அருந்தலாம். இரவு உணவாக அவித்த மீன் மற்றும் கோழி இவற்றுடன் எலுமிச்சை சாறு அருந்தலாம்.
கோடையில் முடிந்த அளவு மாங்காய் மற்றும் தயிர் சாப்பிடலாம். வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் தன்மை மாங்காய்க்கு உண்டு. தயிர், நன்மை செய்யும் நுண்ணுயிரிகளான பாக்டீரியாக்களை சேர்க்கும்.