தன் கட்சி வேட்பாளர் பெயரையே தவறாக உச்சரித்த விஜயகாந்த் ...! சென்னை பிரச்சாரத்தில் ருசிகர காட்சிகள்

உடல் நலம் தேறி ஓய்வு எடுத்து வந்த தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் சென்னையில் இன்று பிரச்சாரம் செய்தார். திக்கித் திக்கி பேசத் திணறிய விஜயகாந்த், தன் கட்சியின் வேட்பாளர் பெயரையே உச்சரிக்க முடியாமல், அழகாபுரம் மோகன்ராஜ் என்பதற்குப் பதில் அழகாபுரம் ஆறுமுகம் அண்ணன் என்று உச்சரித்தார். முதலில் ஒரு சில இடங்களில் சில வினாடிகள் மைக் பிடித்து பேசிய விஜயகாந்த், பின்னர் வேனில் அமர்ந்தபடி முக்கிய சாலைகளில் கையசைத்தபடியே வாக்கு சேகரித்தார்.

உடல் நலம் பாதிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கும் மேலாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தார் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் . தற்போது உடல் நலம் தேறி வீட்டில் ஓய்வு எடுத்து வந்த விஜயகாந்த், பேச கடும் சிரமப்பட்டு வந்தார். இந்த தேர்தலில் ஓரிடத்திலாவது அவரை பிரச்சாரத்தில் பங்கேற்க செய்ய வேண்டும் என்பதில் தேமுதிகவினர் தீவிரம் காட்டினர். அதன்படி இன்று மாலை சென்னையில் உள்ள மக்களவைத் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது.

4 மணிக்குப் பிரச்சாரம் என்று கூறப்பட்ட நிலையில் 6 மணிக்கு மேல் வீட்டிலிருந்து கிளம்பிய விஜயகாந்த், வட சென்னை தொகுதிக்குட்பட்ட பெரம்பூரில் வேனில் அமர்ந்தபடி அரை நிமிடம் திக்கித் திணறி பேசினார்.கொட்டும் முரசு என்பதை தெளிவாக உச்சரித்தவர், தனது கட்சியின் வேட்பாளர் பெயரை அழகாபுரம் மோகன்ராஜ் என்பதற்குப் பதிலாக அழகாபுரம் ஆறுமுகம் அண்ணன் என உச்சரித்தார்.

அடுத்த இடத்திலும் பேசும் போது மிகவும் திணறியதால், அதன் பின்னர் வேனில் அமர்ந்தபடியே சென்னை நகரின் முக்கிய சாலைகளில் கையசைத்தபடி வாக்கு சேகரித்தார்.

More News >>