வேலூர் தொகுதியில் தேர்தல் நடக்குமா?- ரத்து செய்ய ஜனாதிபதிக்கு பரிந்துரை
வேலூர் தொகுதியில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், அத்தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தேர்தல் நடக்குமா? நடக்காதா? என்ற உச்சகட்ட குழப்பத்தில் அத்தொகுதி அரசியல் கட்சியினரும், வாக்காளர்களும் உள்ளனர்.
வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும், அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகமும் போட்டியிடுகின்றனர். இந்த மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஆம்பூர், குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிகளிலும் இடைத் தேர்தல் நடைபெறுவதால் இங்கு தேர்தல் களம் ஆரம்பத்திலேயே சூடு பிடித்தது. ஆனால் பிரச்சாரம் தொடங்கிய சில நாட்களிலேயே கடந்த மார்ச் 30-ந் தேதி மற்றும் ஏப்ரல் 1-ந் தேதிகளில் காட்பாடியில் துரைமுருகன் வீடு, அவருடைய மகனும் வேட்பாளருமான கதிர் ஆனந்த் நடத்தும் பள்ளி, கல்லூரியிலும், திமுக பிரமுகர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையால் அதிர்ந்து போய் கிடக்கிறது வேலூர் தொகுதி.
காட்பாடியில் நடந்த ரெய்டில் சுமார் 10 கோடி ரூபாய்க்கும் மேல் பணம் பிடிபட்ட நிலையில், அந்தப் பணம் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு பட்டு வாடா செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டுருந்ததாக தகவல்கள் வெளியாகி, வேலூர் தொகுதியில் எந்த நேரமும் தேர்தல் ரத்து செய்யப்படலாம் என்று செய்திகள் வெளியாக, அங்கு பிரச்சாரமும் கடந்த 15 நாட்களாக களையிழந்து காணப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு காட்பாடி போலீசில் கதிர் ஆனந்த் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது, தொகுதி தேர்தல் அதிகாரி மற்றும் வருமான வரித்துறைத் துறையினர் கொடுத்த அறிக்கைகளை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்தார்.
இந்த அறிக்கைகளை ஆய்வு செய்த தலைமை தேர்தல் ஆனையம், வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்யும் முடிவுக்கு வந்து விட்டதாகவும், குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற நேற்று இரவு பரிந்துரை செய்யப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் வேலூர் மக்களவைத் தொகுதியுடன் குடியாத்தம், ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் ரத்து செய்யப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி, தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அந்தத் தொகுதிகளில் தேர்தல் நடக்குமா ?இல்லையா? என்பது சஸ்பென்சாகவே உள்ளது.