அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மனைவி படுகொலை: கொலைக்கார மகனை வலை வீசி தேடும் போலீசார்
அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. குழந்தை வேலுவின் மனைவியை அவரது சொந்த மகனே கொலை செய்து விட்டு தப்பி ஒடி விட்டார். அவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
சென்னை பெசன்ட் நகர் 6-வது அவென்யூவில் வசித்து வந்தவர் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. (திருச்செங்கோடு) குழந்தை வேலு. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குழந்தை வேலு மரணம் அடைந்து விட்டார். குழந்தை வேலுவின் மனைவி ரத்தினம் தற்போது அந்த வீட்டில் தனியாக வசித்து வருகிறார். குழந்தை வேலு-ரத்தினம் தம்பதியினருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.
குழந்தை வேலுவின் மகள் சுதா திருப்பூரில் கணவரோடு வசித்து வருகிறார். மகன் பிரவீன் (வயது 35) லண்டனில் வசித்து வருகிறார். ரத்தினத்துக்கும், அவரது மகன் பிரவீனுக்கும் சமீபகாலமாக சொத்து தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் ஒரு மாதத்துக்கு முன்பு லண்டனிலிருந்து சென்னை வந்துள்ளார் பிரவீன். அப்போதும் அம்மாவுக்கும், மகனுக்கும் இடையே மீண்டும் சொத்து தகராறு ஏற்பட்டது.
இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் இரவு ரத்தினம் தனது மகள் சுதாவுக்கு போன் செய்து பிரவீன் சொத்து கேட்டு தகராறு செய்வதாக கூறியுள்ளார். சிறிது நேரத்துக்கு பிறகு சுதா தனது அம்மாவுக்கு போன் செய்துள்ளாள். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சுதா சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு போன் செய்து நடந்த சம்பவத்தை கூறி தனது அம்மா வசிக்கும் வீட்டுக்கு சென்று பார்க்கும்படி கூறியுள்ளார்.
இதனையடுத்து அந்த உறவினரும் ரத்னம் வசிக்கும் வீ்ட்டுக்கு சென்றுள்ளார். வீட்டின் கதவு வெளிப்பக்கம் பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்து போலீசாருக்கு அவர் தகவல் கொடுத்தார்.
இதனையடுத்து அங்கு வந்த சாஸ்திரி நகர் போலீசார் பூட்டை உடைத்து உள்ளே சென்ற போது, ரத்தினம் கத்தி குத்து காயங்களுடன் சடலமாக கிடந்தார். அவரது கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு இருந்தது. வாயில் பேப்பர் திணித்து வைக்கப்பட்டு இருந்தது. போலீசார் சடலத்தை மீட்டு பிரதேச பரிசோதனைக்கு அனுப்பினர். சொத்து தொடர்பாக இந்த கொலை நடந்தது என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. பிரவீனை கைது செய்தால் மட்டுமே கொலைக்கான முழு காரணமும் தெரியவரும். அதனால் தலைமறைவாக உள்ள பிரவீனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். மேலும் பிரவீன் வெளிநாட்டுக்கு தப்பி செல்வதை தடுக்க விமான நிலையத்திலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.