ஓ.பி.எஸ். மகன் தொகுதியில் அதிருப்தி மலையில் குடியேறும் கிராம மக்கள்!!
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தொகுதியில் ஒரு கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து மலையில் குடியேறப் போவதாக அறிவித்துள்ளனர். அவர்கள் இன்று காலை பெட்டிப்படுக்கைகளுடன் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், தேனி நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இந்த தொகுதியில் கடந்த சில நாட்களாக பணமழை பொழிவதாக எங்கும் பேசப்பட்டது. ஆனாலும், ரவீந்திரநாத்துக்கு எதிர்ப்பு குரல்களும் ஒலித்து கொண்டே இருக்கின்றன.
இந்நிலையில், போடி அருகே உள்ள சாலிகிராமத்து பட்டி என்ற கிராமத்து மக்கள் இன்று காலையில் ஊரை காலி செய்து, பெட்டிப் படுக்கைகளுடன் முக்கிய சாலைக்கு வந்து மறியலில் ஈடுட்டனர். அவர்கள் கூறுகையில், ‘‘பத்து வருடங்களுக்கும் மேலாக எங்கள் கிராமத்தில் குடிநீர் இல்லை. சாக்கடை பராமரிப்பே இல்லை, சாலையும் மிக மோசமாக உள்ளது. பல முறை அதிகாரிகளிடமும், ஆட்சியாளர்களிடமும் கோரிக்கை விடுத்தும் பலனில்லை. அதனால், அடிப்படை வசதிகள் செய்து தராததைக் கண்டித்து நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கிறோம். கிராம மக்கள் 300க்கும் மேற்பட்டோர், ஊரை காலி செய்து மலைப்பகுதியில் குடியேறத் திட்டமிட்டுள்ளோம்’’ என்றனர்.
சாலை மறியல் தகவல் அறிந்து வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் வந்து அவர்களை சமாதானப்படுத்தினர்.