டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த ஆசிரியர்களுக்கு நேர்ந்த கதி
அமமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த இரண்டு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் கே.பி.முனுசாமி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக கூட்டணியில் போட்டியிடுகிறார் காங்கிரஸ் வேட்பாளர் ஏ. செல்லக்குமார். கர்நாடக, ஆந்திர எல்லையையொட்டிய தொகுதி என்பதால், தமிழர்கள் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் அதிகம் உள்ளனர். அதனால், இவர்களது வாக்கு தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால் கிருஷ்ணகிரி தொகுதி முக்கியத்துவம் பெறுகிறது.
அதன் வகையில், டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கணேச குமார் போட்டியிடுகிறார். இவரை ஆதரரித்து கெலமங்கலம் ஒன்றியம் வெள்ளிச்சந்தை, உள்ளுகுறுக்கை, நெல்லூர், தக்காளி மண்டி, பிள்ளையார் அக்ரஹாரம், ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதியில் டிடிவி தினகரனும், அக்கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அமமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த இரண்டு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். கெலமங்கலம் வட்டார கல்வி அலுவலர் நாகராஜ், நெடுங்கல் உயர் நிலை பள்ளி கணித ஆசிரியர் ஜெயபிரகாஷ் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த நடவடிக்கை அமமுகவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.