டிடிவி தினகரனுக்கு ஓட்டு போடுங்கள்....அவர்..? பாஜகவை கலங்கடிக்கும் சுப்பிரமணியன் சுவாமி

தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஊழல் கட்சிகள் என பாஜக-வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையில், நாளை மறுநாள் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இதனால், தேசிய மற்றும் மாநில தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரம் செய்து வருகிறார்கள்.

மத்தியில் ஆளும் பாஜக, தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உள்ளிட்ட அக்கட்சியின் பல்வேறு தலைவர்களும் தமிழகத்தில் பரப்புரை மேற்கொண்டனர். இந்நிலையில், சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்ததில் இருந்ததே அது குறித்து கடும் அதிருப்தியைத் தெரிவித்து வருகிறார். அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெறாமல் 40 தொகுதிகளிலும் பாஜக தனித்து நின்றிருக்க வேண்டும்; அதிமுக தேர்தல் அறிக்கையை குப்பையில்தான் போட வேண்டும் போன்ற சர்ச்சை கருத்துகளைக் கூறி வந்தார்.

இந்நிலையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ‘தமிழகத்தில் உள்ள அரசியல் நிலைமை குறித்து வீராட் இந்துஸ்தான் சங்க நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்ததாகவும், தமிழகத்தில் உள்ள தேசியவாதிகள் டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். ஊழல் விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றுதான் என விமர்சித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, டிடிவி தினகரன் கட்சிக்கு தேசிய உணர்வு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி டிடிவி தினகரனுக்கு வாக்களியுங்கள் என வெளிப்படையாகத் தெரிவித்திருப்பது அதிமுகவினரை மட்டுமின்றி பாஜகவினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

More News >>