பிரதமர் மோடியின் கைக்குள் தேர்தல் ஆணையம்! - சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மிகப்பெரிய மோசடி நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.
ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 11ம் தேதி நடந்தது. அப்போது, சுமார் 92,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஆனதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து, நூற்றுக்கணக்கான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்படவில்லை, அதனால் மின்னணு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்ட இடங்களில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு அண்மையில் கடிதம் எழுதினார் சந்திரபாபு நாயுடு.
இந்நிலையில், விஜயவாடாவில் செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு, ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மிகப்பெரிய மோசடி நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக குற்றம்சாட்டினார். ரிசர்வ் வங்கி, சிபிஐ வரிசையில் தற்போது தேர்தல் ஆணையமும் மோடியின் கைக்குள் வந்துள்ளது மிகவும் ஆபத்தான ஒன்று எனத் தெரிவித்த அவர், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் VVPAT எனப்படும் வாக்காளர்கள் ஒப்புகை சீட்டுகளில் 50 சதவீத ஒப்புகை சீட்டுகள் வாக்குப்பதிவு இயந்திரத்துடன் சரிபார்க்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார் சந்திரபாபு நாயுடு.