தீபா பேரவைக்கு டிரைவர் ராஜாதான் மாநில செயலாளர்!
“எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவைக்கு டிரைவர் ராஜா தலைமை நிலைய மாநில செயலாளராக நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா கூறியுள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையை ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயராமனின் மகள் ஜெ.தீபா தொடங்கினார். தனது பேரவையில் தனது கார் டிரைவர் ராஜாவுக்கு பதவி கொடுக்கப்பட்டது.
அதன் பின்னர் கட்சிக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி சமீபத்தில் ராஜா நீக்கப்பட்டார். இந்நிலையில் ராஜாவுக்கு மீண்டும் தீபா பேரவையில் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில், “எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையில் ராஜா இன்று முதல் தலைமை நிலைய மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கழக உடன்பிறப்புகள் அனைவரும் அவருக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஏ.வி.ராஜா விளக்கம் கொடுத்ததை ஏற்றுக் கொண்டு இன்று முதல் மீண்டும் கழக மற்றும் பேரவை வளர்ச்சி பணிகளில் ஈடுபடுவார் என்பதை தெரிவிக்கிறேன்.
ஏ.வி.ராஜா கட்சிக்கு குந்தகம் விளைவித்ததாக சொல்லப்பட்ட செய்திகள் நிரூபிக்கப்படாததாலும் கடந்த ஓர் ஆண்டு காலமாக அவர் நீடித்து பேரவை மற்றும் கழக வளர்ச்சி பணிகளில் ஈடுபட்டு வந்ததாலும் அவருடைய விளக்கம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஏ.வி.ராஜா இன்று முதல் மீண்டும் கழக பணிகள் ஆற்றுவார் என்று தெரிவிக்கிறேன். கழக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அவருடன் இணைந்து பணியாற்றலாம் என தெரிவிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.