தடம் மாறிய முல்லைவேந்தன்! தி,மு.க.வை விட்டு சென்றது ஏன்?
அதிருப்தியாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அரவணைத்து அருகில் வைத்துக் கொண்டு அரசியல் செய்வதுதான் திமுக தலைவர் கருணாநிதியின் அரசியல் பலம். ஸ்டாலின் திமுக தலைவரானதும் முதலில் அனைவரையும் அரவணைத்தே சென்றார். திமுகவில் இருந்து விலகிச் சென்ற பலரையும் அழைத்து பேசினார். அதிருப்தியாளர்களை அழைத்து உற்சாகப்படுத்தினார். அப்படித்தான் கட்சியை விட்டு விலகியிருந்த முல்லைவேந்தனை அழைத்து மீண்டும் கட்சியில் இணைத்து உற்சாகப்படுத்தினார்.
முல்லைவேந்தன் முன்னாள் அமைச்சர் திமுகவின் தருமபுரி பகுதியில் பலமான நிர்வாகி. திமுகவில் மீண்டும் இணைந்த பின்பு அவரால் தலைமையோடு முன்பு போல கட்சி நி்ர்வாகிகளிடம் எளிதாக பழகவோ, அணுகவோ முடியவில்லையாம். காரணம், அவர் ஸ்டாலின் எடுக்கும் முடிவுகளைப் பற்றி வெளிப்படையாக கட்சிக்காரர்கள் முன்னிலையில் விமர்சித்து பேசியிருக்கிறார். மேலும், ஸ்டாலினுக்கு சுத்தமாக பிடிக்காத அவரது அண்ணன் அழகிரியோடு முல்லைவேந்தன் தொடர்பில் இருந்தாராம்.
இதெல்லாம் தெரியவந்ததால் கட்சியில் சேர்ந்த முல்லை வேந்தனை ஸ்டாலின் கண்டு கொள்ளவில்லை. இதனால், அதிருப்தியடைந்த முல்லைவேந்தன் அமைதியாக இருந்த நிலையில், தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக டாக்டர் செந்தில்குமார் அறிவிக்கப்பட்டார். 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதியில் அரூர் சட்டமன்ற தொகுதியில் கிருஷ்ணகுமாரையும், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்கு மணியும் திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்கள். ஆனால், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட விரும்பிய முல்லைவேந்தன் விருப்பமனு கூட கொடுக்க முடியாத அளவுக்கு கசப்பு வளர்ந்து சென்றது. கட்சியில் சீனியரான அவருக்கு தேர்தல் பொறுப்புகளிலும் அந்த பணியும் தரப்படவில்லை.
இந்நிலையில், தருமபுரி வந்த உதயநிதி, அதிருப்தியில் உள்ள முல்லைவேந்தன் கட்சி மாறப் போவதாக தகவல் கேள்விப்பட்டு, அவரை சமாதானம் செய்தார். உதயநிதி சொல்லி ஸ்டாலினும் முல்லைவேந்தனுடன் தொலைபேசியில் பேசியதாக தெரிகிறது. ஆனாலும், சமாதானம் அடையாத முல்லைவேந்தன், பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அன்புமணியைச் சந்தித்தார். அடுத்த சில மணி நேரங்களில் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார் முல்லைவேந்தன்.
முல்லை வேந்தன் கொங்குவேளாளர் சாதியைச் சேர்ந்தவர். தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் வன்னியர்களுக்கு அடுத்த வாக்குவங்கியைக் கொண்ட இந்த சாதியினரிடம் முல்லைவேந்தனுக்கு ஓரளவுக்கு செல்வாக்கு உண்டு. முல்லை வேந்தன் பாமக பக்கம் சாய்ந்திருப்பது தருமபுரியில் அன்புமணிக்கு கூடுதல் பலத்தை தந்துள்ளது. இது திமுகவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
தங்களுடன் தொகுதி பேரத்தில் ஈடுபட்டுக் கொண்டே அதிமுகவுடனும் பேரம் பேசிய பாமக தோற்க வேண்டும். குறிப்பாக அன்புமணி தருமபுரியில் தோற்க வேண்டும் என்று திமுக தீவிரமாக இருந்தது. அதனால்தான், ஸ்டாலின் தனது பிரச்சாரத்தில் பா.ம.க, மற்றும் ராமதாசை கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில், முல்லைவேந்தன் பாமகவுடன் போனது திமுகவுக்கு பலவீனம்தான் என்கிறார்கள்.