இறுதிக் கட்ட பிரசாரம் தீவிரம் - சேலத்தில் தெருத்தெருவாக நடந்து முதல்வர் எடப்பாடி ஓட்டு வேட்டை
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடையும் நிலையில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அனல் பறக்கிறது. தமது சொந்த மாவட்டமான சேலத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெருத்தெருவாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.
தமிழகத்தில் இன்று இறுதிக்கட்ட பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இன்று காலை முதலே கடைசி நேர பரபரப்பில் வேட்பாளர்கள், கட்சித் தலைவர்கள் ஓய்வெடுக்காமல் விறுவிறுவென ஓட்டுக் கேட்டு வருகின்றனர். கடந்த 25 நாட்களாக வேன் மூலம் தமிழகம் முழுவதும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காக தனியொருவனாக தீவிர பிரச்சாரம் செய்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி .
இன்று வித்தியாசமாக சேலம் நகர்ப் பகுதியில் அதிமுக வேட்பாளர் சரவணனுடன் வீதிகளில் இறங்கி எடப்பாடி பழனிச்சாமி ஓட்டு வேட்டை நடத்தினார். துண்டுப்பிரசுரங்களை கடை, கடையாக வழங்கி கும்பிடு போட்டபடி ஓட்டுக் கேட்டார் எடப்பாடி பழனிச்சாமி . வழியில் டீக்கடையில் நுழைந்தவர் தான் மட்டும் டீ குடித்தபடியே டீக்கடைக்காரரிடம் ஓட்டுக் கேட்டதுடன், தொகுதி நிலவரம் குறித்தும் ஆர்வமாக விசாரித்தார். இதுவரை வேனில் நின்று பிரச்சாரம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெருவில் நடந்து ஓட்டு வேட்டையாடியது சேலம் மக்களை வெகுவாக கவர்ந்தது.