உ.பி.யில் தலைவர்களுக்கு வாய்ப்பூட்டு - தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் சபாஷ்

உ.பி.யில் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் தலைவர்கள் மீது தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்ததன் மூலம் தனது பழைய சக்தியை நிரூபித்துள்ளது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சபாஷ் போட்டுள்ளனர்.

எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்கு இந்த முறை இந்திய தேர்தல் ஆணையம் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. இதனால் தேர்தல் ஆணையம் மீது உச்ச நீதிமன்றம் சவுக்கை சுழற்றியது. அதன் பின்னரே சுதாரித்த தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களாக பாரபட்சம் காட்டாது விறுவிறுவென நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

முதலில் பாஜகவின் நமோ டிவி பற்றி கேள்வி கேட்டதுடன், மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்கும் தடை போட்டது. அடுத்ததாக உ.பி.யில் வாய்க்கு வந்தபடி கன்னாபின்னாவென பேசி வந்த பாஜகவைச் சேர்ந்த முதல்வர் யோகி ஆதித்ய நாத், மத்திய அமைச்சர் மேனகா காந்தி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் அசம்கான் ஆகியோருக்கு 2 , 3 தினங்களுக்கு பொதுவெளியில் பேசக்கூடாது என்று வாய்ப்பூட்டு போட்டது தேர்தல் ஆணையம் .

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த மாயாவதி, தமக்கு வாய்ப்பூட்டு போட்டதற்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தை இன்று நாடினார். ஆனால் நீதிபதிகளோ, மாயாவதியின் கோரிக்கையை நிராகரித்ததுடன், தேர்தல் ஆணையத்தை புகழ்ந்து தள்ளினர்.

தேர்தல் ஆணையம் இது போன்று பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கைகளை தொடரலாம் என்று ஊக்கப்படுத்திய உச்சநீதிமன்ற நீதிபதிகள், தனது சக்தியை தேர்தல் ஆணையம் இப்போது தான் நிரூபிக்க ஆரம்பித்துள்ளது என்றும் சபாஷ் கூறி சபாஷ் போட்டனர்.

More News >>