ஒடிசாவில் பா.ஜ. தலைவர் சுட்டு கொலை
ஒடிசாவில் குர்தா நகரில் மண்டல பா.ஜ. தலைவரை மர்ம நபர் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டார்.
ஒடிசா மாநிலத்தில் குர்தா நகரத்தைச் சேர்ந்தவர் மங்குலி ஜனா. குர்தா நகரத்தின் மண்டல பாஜக தலைவராக அவர் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு குர்தா தொகுதியின் பாஜக வேட்பாளர் வீட்டின் அருகில் நின்றுக் கொண்டு தேர்தல் பணிகள் குறித்து பாஜக தொண்டர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனம் ஒன்றில் வந்த மர்ம நபர், சற்றும் எதிர்பாராத விதமாக அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் 2 குண்டுகள் அவர் மீது பாய்ந்தன.
இதனையடுத்து அங்கிருந்தவர்கள் ஜனாவை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்நகரத்தின் நான்கு புற எல்லைகளையும் அடைத்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.
மங்குலி ஜனாவை கொன்றவரை கைது செய்ய வலியுறுத்தி குர்தா பகுதி பாஜகவினர் நேற்று காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் அவர்களிடம் ஜனநாயகத்தை காப்பாற்றவும், ஆர்ப்பாட்டத்தை விடுத்து கலைந்து செல்ல வேண்டியும் வலியுறுத்தினார். மேலும் இதற்கான பதில், தேர்தலில் மக்களின் வாக்குகளில் வெளிப்படும் எனவும் கூறினார். அதன் பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
இச்சம்பவம் குறித்து குர்தா தொகுதி பாஜக வேட்பாளர் கூறுகையில், ‘இந்த சம்பவத்திற்கு நான் கடுமையான கண்டனம் தெரிவிக்கிறேன். எனது 40 ஆண்டுகால அரசியலில் குர்தா பகுதியில் இது போன்ற கொடூரம் நடப்பது இதுவே முதல் முறையாகும்’ என கூறினார்.