உயிருக்கு பாதுகாப்பு இல்லை...திமுக கூட்டணி மீது கரூர் கலெக்டர் பரபரப்பு புகார்!

தன் உயிருக்கும் தனது குடும்பத்தினருடைய உயிருக்கும் பாதுகாப்பு இல்லை என கரூர் கலெக்டர் அன்பழகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

கரூர் மக்காவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடுகிறார் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி. அதிமுக சார்பில் துணை சபாநாயகர் தம்பிதுரை மீண்டும் போட்டியிடுகிறார். தேர்தலில் மிகவும் முக்கியமான தொகுதியாகப் பார்க்கப்படும் கரூர் தொகுதியில் அதிமுக, காங்கிரஸ் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, கரூர் பேருந்து நிலையத்தின் அருகில் இறுதிக்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்வது தொடர்பாக அதிமுக-திமுக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மற்றும் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜி ஆகியோர், இறுதிக்கட்ட பிரசாரம் செய்வதற்கான நேரம் மறுக்கப்பட்டதாகக் கூறி ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 14ம் தேதி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இந்நிலையில், தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட பிரசார நேரத்தில் பிரசாரம் செய்ய அனுமதி வேண்டும் என நேற்று அதிமுக மாவட்ட செயலாளரும், போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்ஆர்.விஜயபாஸ்கர் ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

இந்நிலையில், கரூர் தொகுதியில் அதிமுக – திமுகவினர் இடையில் ஏற்பட்ட மோதலால், தன் உயிருக்கு ஆபத்து எனக் கரூர் ஆட்சியர் அன்பழகன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘கரூர் பேருந்து நிலையத்துக்கு அருகே இறுதிக்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்ய வேண்டும் என ஜோதிமணி மற்றும் செந்தில்பாலாஜி கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். தன்னை மிரட்டி பிரசாரத்திற்கான அனுமதியைப் பெற்றனர். அதே இடத்தில் பிரசாரம் செய்ய போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளதாகக் கூறி மனு அளித்துள்ளார். இது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திடம் தகவல் அளிக்கப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது என்றவர், 

அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் செந்தில்பாலாஜி, கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி சார்பில் வழக்கறிஞர் செந்தில்நாதன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு எனது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். உடனே, செந்தில்பாலாஜிக்கும், ஜோதிமணிக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது, அவர்கள் மிரட்டல் விடுக்கும் தோணியில் பேசினார்கள்’ என்று பேசிய அன்பழகன், ‘எனது உயிருக்கும், குடும்பத்தினருக்கும் ஆபத்து உள்ளது’ என்றார்.

More News >>