பொள்ளாச்சி விவகாரம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, முகிலன் மாயம் என இறுதி கட்ட பிரசாரத்தில் அதிமுக பாஜகவை நாக்-அவுட் செய்த கனிமொழி!
தமிழகத்தில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரங்கள் ஓய்வடைந்துள்ளன. ஆனால், ஒரு சில இடங்களில் இன்னமும் தேர்தல் பிரசாரங்கள் ரகசியமாக அரங்கேறி வருகின்றன.
இறுதி நாள் தேர்தல் பிரசாரம் என்பதால், தூத்துக்குடியில், பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜனை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி, எட்டயபுரத்தில் தனது தீப்பொறி பிரசாரத்தை நடத்தினார்.
அப்போது பேசிய அவர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மக்கள் மூட சொல்லி போராட்டம் நடத்தியபோது வராத மாநில அரசும், மத்திய அரசும், இப்போது எப்படி தான் தூத்துக்குடி மக்கள் மத்தியில் கூச்சமில்லாமல் வாக்கு கேட்கின்றார்களோ என்றார். மேலும், எடப்பாடி அரசின் அராஜகத்தால், அமைதியாக நடந்த போராட்டத்தை கலவரமாக மாற்றி 13 பேரை கொன்று குவித்தனர்.
இதுகுறித்து தகவலை தெரிவித்த, முகிலனை இன்னும் காணவில்லை என்றார்.
கஜா புயலின் தாக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயிர்க்காப்பீடு தொகை இன்னமும் வந்து சேரவில்லை. ஆனால், 100 சதவிகிதம் கொடுத்தாச்சுன்னு பொய் சொல்றாங்க என்றார்.
நம் நாட்டு ராணுவ வீரர்களின் உயிர்த் தியாகங்களை வைத்து மோடி தேர்தல் பிரசாரம் செய்கிறார். இதைவிட கீழ்த்தரமான பிரசாரத்தை இந்தியா இதுவரை பார்த்திராது என்று பாய்ந்த கனிமொழி, தமிழ்நாட்டின் தொன்மையான கீழடி ஆராய்ச்சியையும் பாஜக அரசு மறைக்க முயற்சி செய்து வருகிறது என குற்றஞ்சாட்டினார்.
வரும் தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணிக்கு தூத்துக்குடி மக்கள் நல்ல பாடத்தை புகட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட கனிமொழி, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பொள்ளாச்சி விவகாரம் குறித்து விசாரிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட அத்தனை பெண்களுக்கும் உரிய நீதி கிடைக்க செய்வோம் என உறுதியளித்தார்.