எட்டுவழிச்சாலை சிக்கல் தருமபுரிக்குள் முடங்கிய பாமகவினர்!
சென்னை சேலம் இடையிலான எட்டுவழிச்சாலை திட்டத்தை பாமக எதிர்க்கும் என்று அன்புமணி ராமதாஸ் கூறிய நிலையில், கூட்டணிக்குள் ஒருமித்த கருத்து ஏற்படாத நிலையில் சிக்கலை சந்தித்துள்ள பாமக தருமபுரி தொகுதியில் மட்டும் தன் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது.
சென்னை முதல் சேலம் வரையிலான எட்டுவழிச்சாலையை தமிழக அரசு அறிவித்த நாள் முதல் மிகக்கடுமையாக அதை எதிர்த்து போராடி வந்தார் அன்புமணி. ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று “வன்னியர்களின் நிலங்கள்தான் அதிகம் பறிபோகிறது. அதனால் இந்த திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்” என்று கூறினார்கள். பின்னர் எட்டுவழிச்சாலை திட்டத்தைக் கொண்டு வந்த அதிமுகவுடனும், பாஜகவுடனும் பாமக கூட்டணி வைத்தது. கடந்த ஏழு ஆண்டுகளாக அதிமுகவை விமர்சித்த ராமதாஸ் திடீரென கூட்டணி வைத்தது பொது வெளியில் கடும் விமர்சனங்களை உருவாக்கிய நிலையில், எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்று தீர்ப்பு வந்ததால், பாமகவினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால், இந்த திட்டத்தை கொண்டு வருவதில் பாமகவின் கூட்டணிக் கட்சியான அதிமுக, பாஜக உறுதியாக இருப்பதை வெளிப்படுத்தி பேசியது.
குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி “எட்டுவழிச்சாலை திட்டம் அதிமுகவின் கனவுத்திட்டம். இந்த சாலை அமைந்தால் தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும்” என்றார். இந்நிலையில்தான் சேலத்தில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் மத்திய பாஜக அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். அக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், பாமக தலைவர் ராமதாஸும் கலந்து கொண்டனர். அவர்களை மேடையில் வைத்துக் கொண்டே பேசிய நிதின் கட்கரி “நீட் தேர்வு கொண்டு வரப்படும், எட்டுவழிச்சாலை திட்டம் விவசாயிகளின் சம்மதத்துடன் கொண்டு வரப்படும். இந்த திட்டத்தை கொண்டு வருவதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆர்வத்துடன் உள்ளார்” என்றும் போட்டுடைத்தார்.
இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உற்சாகமாக இருந்த நிலையில் ராமதாஸ் அங்கேயே அப்செட் ஆனார். அதுவரை எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு நீதிமன்றம் மூலம் தடை வாங்கியதே அன்புமணிதான் என்று தருமபுரியில் பிரச்சாரம் செய்த பாமகவால் அதன் பின்னர் அந்த விவகாரத்தை பேச முடியாமல் போனது. எட்டுவழிச்சாலை விவகாரத்தை கையாள பாமக சந்திரகுமார் என்பவரை நியமித்திருந்தது அவர் போராட்டக் குழுவிலும் இருந்தார். இப்போது அவர் அதிருப்தியில் போராட்டக் குழுவில் இருந்து ஒதுங்கி விட்டதாக கூறப்படுகிறது.
செல்லும் இடங்களில் எல்லாம் மக்களின் கடுமையான எதிர்ப்பை பாமக எதிர்கொண்டு வரும் நிலையில், ஏழு தொகுதிகளில் போட்டியிடும் பாமக தருமபுரியில் மட்டும் நாம் தோற்றால் அது மானப்பிரச்சனை ஆகி விடும் எனவே தருமபுரியில் கவனம் செலுத்துங்கள் என்று ராமதாஸ் உத்தரவிட ஒட்டு மொத்த பாமக பிரமுகர்களும் தருமபுரி தொகுதியில் பல அணிகளாக பிரிந்து வீடு வீடாகச் சென்று அன்புமணிக்காக வாக்குக் கேட்டு வருகிறார்கள். மற்ற பாமக வேட்பாளர்களில் நிலை சங்கடமாக உள்ளது ஒரு பக்கம் இருந்தாலும், இந்த தேர்தலுக்குப் பின்னர் பாமகவில் பிளவு ஏற்படும் சூழலை இந்த தேர்தல் உருவாக்கி விட்டது என்கிறார்கள்.