தூத்துக்குடியில் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் ஐடி ரெய்டு!

தூத்துக்குடியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் ஐடி ரெய்டு நடந்து வருகிறது.

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பாகக் கனிமொழி, பா.ஜ சார்பாகக் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். ஆளுமை மிகுந்த இரு பெண் தலைவர்கள் களம் இறங்கியிருக்கும் தூத்துக்குடி தொகுதியில் இரு முனைப்போட்டி கடுமையாக இருக்கிறது. ஸ்டெர்லைட் துப்பாகிச்சூட்டில் 13 அப்பாவி உயிர்கள் பலியான விவகாரம், தாது மணல் கொள்ளை, தாமிரபரணி நதி நீர் பிரச்னை, தீப்பெட்டித் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு சிக்கல், உப்பளத் தொழிலாளர் மற்றும் மீனவர் பிரச்னை என இடியாப்பச் சிக்கல்கள் மிகுந்த இந்தத் தொகுதியில் வெற்றிக்காகக் கனிமொழியும் தமிழிசையும் கடுமையாகப் போராடி வருகிறார்கள்.

இதற்கிடையே இன்றுபிரசாரத்தை நிறைவு செய்த பின் தூத்துக்குடியில் அவர் தங்கியிருக்கும் குறிஞ்சி நகர் வீட்டுக்கு வருகை தந்தார். அப்போது அங்கு இரண்டு கார்களில் வந்த 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் கனிமொழியின் வீட்டில் சோதனை நடத்தினர். தற்போது வரைக்கும் இந்த சோதனை நடந்து வருகிறது. வீட்டில் உள்ள பணியாளர்களை வெளியேற்றிய அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் தொகுதியில் போட்டியிடுவதற்கு ஏதுவாக குறிஞ்சி நகர் பகுதியில் ஒரு வீட்டை வாடகை எடுத்திருந்தார் கனிமொழி. இந்த இல்லம் தூத்துக்குடியைச் சேர்ந்த தொழிலதிபருக்கு சொந்தமானது. இங்கு தான் அவரது அலுவலகமும் செயல்பட்டு வந்தது. இதற்கிடையே, வருமான வரித்துறை அதிகாரிகளின் திடீர் சோதனையால் கனிமொழியின் இல்லம் முன்பு தூத்துக்குடி திமுக எம்எல்ஏ கீதா ஜீவன் உள்ளிட்ட ஏரளமான கட்சி பிரமுகர்கள் திரண்டுள்ளனர். அவர்கள் மோடி அரசுக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி வருகின்றனர். தொடர்ந்து தொண்டர்களின் வருகை அதிகரித்துள்ளதால் அங்கு தற்போது பதற்றம் நிலவி வருகிறது.

More News >>