நாற்பது வயதாகிவிட்டதா... கிட்னி ஸ்டோன் வரலாம்!

சிறுநீரக கல் பொதுவாக காணப்படும் ஒரு உடல்நல பிரச்னை. இந்திய மக்கள்தொகையில் 12 விழுக்காட்டினர் சிறுநீரக கல்லால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுநீரகத்தினுள் உருவாகும் கல் வெளியே வந்து, சிறுநீரக பாதையை அடையும்போது வலி தாங்க இயலாததாகிவிடுகிறது. சிறுநீர் வெளியேற இயலாமல் தடுக்கப்படுவதால் வலி உச்சக்கட்டத்தை எட்டுகிறது.

பெரும்பாலும் வெப்பமான, வறண்ட பகுதிகளில் வாழ்பவர்கள் சிறுநீரக கல்லால் பாதிக்கப்படுகின்றனர். 40 முதல் 60 வயது என்ற பிரிவில் இருக்கும் ஆண்களுக்கு கல் உருவாக வாய்ப்பு அதிகம் உள்ளது. பரம்பரை குறைபாடாகவும் இது வரக்கூடும். பொதுவாக பெண்களை விட ஆண்களே இப்பிரச்னையினால் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படுகின்றனர். தற்போது பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

குறைவாக நீர் அருந்துதல், உணவில் அதிக உப்பு சேர்த்து கொள்தல், விலங்கு புரதம் அதிகமாக சாப்பிடுதல் ஆகியவை சிறுநீரக கல்லை உருவாக்கும் காரணிகளாக இருக்கின்றன. பெரும்பாலான சிறுநீரக கற்களில் கால்சியம் என்னும் சுண்ணாம்பு சத்தே காணப்படுகிறது. கால்சியம் ஆக்ஸலேட்தான் சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. யூரிக் அமில கற்கள், நோய்தொற்றின் காரணமான கற்கள் மற்றும் பாஸ்பேட் கற்கள் என்ற வகையிலும் சிறுநீரக கற்கள் உருவாகக்கூடும்.

கல்லின் அளவு சிறிதாக இருந்தால் மருந்தின் மூலம், அதிக நீர் அருந்துவதன் மூலம் அதை வெளிக்கொண்டு வருவது எளிது. கல்லின் அளவு பெரிதாகும்போது அறுவை சிகிச்சை போன்ற பெரிய அளவு சிகிச்சைகள் கண்டிப்பாக தேவைப்படும். தற்போது தழும்பில்லாத முறையிலான எண்டோஸ்கோபிக் என்ற சிகிச்சை மூலம் கற்கள் அகற்றப்படுகின்றன.

ஒருமுறை சிறுநீரக கல் பிரச்னை வந்தால், ஐந்து ஆண்டு இடைவெளியில் மீண்டும் பாதிப்பு ஏற்படுவதற்கு ஐம்பது விழுக்காடு வாய்ப்பு உள்ளது. ஆகவே, ஒருமுறை சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டால் ஆண்டுக்கு ஒருமுறையேனும் அல்ட்ரா சவுண்ட் என்னும் ஸ்கேன் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. போதுமான நீர் அருந்துங்கள்; பெரும்பாலும் இந்த தொல்லையை அனுபவிப்பதை தவிர்த்துவிடலாம்.

More News >>