சபேசன் வீட்டில் என்ன எடுத்தீர்கள்? ஐ.டி.க்கு ஸ்டாலின் கேள்வி

அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர் சபேசன் வீட்டில் என்ன எடுத்தார்கள் என்று வருமான வரித்துறையினர் இது வரை ஏன் சொல்லவில்லை என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் இன்று காலை ஸ்டாலின், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு: எதிர்க்கட்சிகளை மட்டும் குறிவைத்து வருமானவரித் துறையினர் ரெய்டு நடத்துகிறார்கள். பிஜேபி, அ.தி.மு.க. வேட்பாளர்களின் வீடுகளில் பணமே இல்லையா?

எதிர்க்கட்சிக்காரர்கள் இடங்களில் ரெய்டு நடத்தி தகவல் சொல்லும் வருமான வரித்துறையினர், ஆளும்கட்சிப் பற்றி வாயே திறக்கவில்லையே! உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர் சபேசன் வீடுகளில் கொஞ்ச நாள் முன்பு ரெய்டு நடத்தினார்கள். அவர்தான் உள்ளாட்சித் துறையில் எல்லா ஒப்பந்தங்களையும் எடுப்பவர். அவர் வீட்டில் என்ன எடுத்தார்கள் என்று இது வரை ஏன் சொல்லவில்லை?

ஆளும்கட்சி எவ்வளவு கோடி, கோடியாக கொட்டிக் கொடுத்தாலும், ஓட்டுக்கு ஆயிரம், 5 ஆயிரம், 10 ஆயிரம் என்று கொடுத்தாலும் சரி. இந்த ஆட்சியையும், மத்தியில் உள்ள ஆட்சியையும் அப்புறப்படுத்த மக்கள் உறுதியாக இருக்கிறார்கள். தேர்தலில் பணத்துக்கு யாரும் அடிமையாக மாட்டார்கள். நிச்சயமாக, இது ஒரு புதிய தேர்தலாக அமையும்.

பணத்துக்கு அடிபணியாத வாக்காளர்கள் என்ற பெயர் தமிழக மக்களுக்கு ஏற்படும். தூத்துக்குடி வேட்பாளர் வீட்டில் ரெய்டு நடத்தியது, தி.மு.க. கூட்டணி தொண்டர்களை, பூத் ஏஜென்டுகளை எல்லாம அச்சுறுத்துவதற்காகத்தான். இதற்கெல்லாம் தி.மு.க. அஞ்சாது. வேலூர் தேர்தல் ரத்து ஆணையில் ஜனாதிபதியே கையெழுத்து போட்டிருக்கிறார். அதனால், நீதிமன்றத்தில் பரிகாரம் காண முடியாது என்று நினைக்கிறோம். ஆனாலும் அது பற்றி யோசிப்போம்.

தேர்தல் ஆணையத்தை முறைப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று தொடர்ந்து சொல்லி வருகிறோம். ஆட்சிக்கு வந்ததும் அதை செய்வோம்.சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி, பழம் விற்கும் பெண்ணுக்கு பணம் கொடுத்த வீடியோ காட்சி வாட்ஸ் அப்பில் வந்தது. அவர் பழத்துக்கு பணம் கொடுத்தார் என்றால், அதை குனிந்து கொண்டு மறைத்து கொடுக்க வேண்டும்? பகிரங்கமாக கொடுக்க வேண்டியதுதானே! பழத்துக்கு கொடுத்தேன் என்று சொல்வது ஊரை ஏமாற்றும் நாடகம்.இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

 

தடம் மாறிய முல்லைவேந்தன்! தி,மு.க.வை விட்டு சென்றது ஏன்?
More News >>