அ.தி.மு.க. பிரமுகரின் பணம் தங்கத்தமிழ்ச்செல்வன் திடுக்
ஆண்டிப்பட்டியில் அ.ம.மு.க. கட்சி அலுவலகத்தில் நேற்றிரவு வருமானவரித் துறையினர் திடீர் ரெய்டு நடத்தி, ஒன்றரை கோடி ரூபாய் எடுத்தனர். அப்போது அவர்களை தடுத்த அக்கட்சியின் தொண்டர்களை விரட்ட வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வடநாட்டு பத்திரிகைகளிலும் இன்று இந்த செய்தி பிரதானமாக இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில், அ.ம.மு.க. பொதுச் செயலாளரும், தேனி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளருமான தங்கத் தமிழ்ச்செல்வன், ஆண்டிப்பட்டியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஆண்டிப்பட்டியில் எங்கள் அலுவலகம் இருக்கும் கட்டிடம் அமரேசன் என்ற அ.தி.மு.க. பிரமுகரின் காம்ப்ளக்ஸ் ஆகும். அமரேசன், லோகிதாசன் ஆகியோரிடம் தான் அது இருக்கிறது. எங்க அலுவலகம் கீழே இருக்கிறது. அதில் நாங்கள் பணமே வைத்திருக்கவில்லை. அ.தி.மு.க. பிரமுகர்களின் கட்டிடத்தில் எந்த முட்டாளாவது பணத்தை வைப்பானா? நாங்க எப்படி அங்க பணத்தை வைத்திருப்போம். அது அ.தி.மு.க. பிரமுகர்களின் பணம். அவர்களை தோல்வி பயத்தில் பணத்தை வைத்து எங்கள் மீது குற்றம்சுமத்தி நாடகம் ஆடியிருக்கிறார்கள். யாரோ வாக்குமூலம் கொடுத்ததாக சொல்லி எங்கள் மீது வழக்கு தொடுக்கிறார்கள். அ.ம.மு.க. அலுவலகத்தில்தான் பணம் எடுக்கப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? ரெய்டு செய்யும் போது எதற்காக லைட்டை ஆப் செய்தார்கள்? எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்? தேனி தொகுதியில் வாக்காளர்களுக்கு அ.தி.மு.க.வினர் 150 கோடி ரூபாய் பட்டுவாடா செய்திருக்கிறார்கள். அதற்கெல்லாம் நிறைய வீடியோ ஆதாரங்கள் இருக்கிறது. அதை வைத்து என்ன செய்வது? நடவடிக்கை எடுப்பதற்குத்தான் யாருமே இல்லையே? தேர்தல் ஆணையம், போலீஸ் எல்லாரும் இவ்வளவு அராஜகமாக நடக்கிறார்களே என்று மக்களே பேசுகிறார்கள். எங்கள் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திப்போம். காவல்துறை இப்போது ஓ.பி.எஸ் கட்டுப்பாட்டில் இருக்கிறது. 150 பேர் மீது வழக்கு என்று சொல்கிறார்கள். எங்க கட்சியின் பூத் ஏஜென்டுகளை காரணமில்லாமல் கைது செய்து வாக்குச்சாவடியில் இருக்க விடாமல் தடுப்பதற்கு சதித் திட்டம் போட்டிருக்கிறார்கள். நிலக்கோட்டையில் சட்டசபைத் தேர்தலுக்கு அதிமுகவினர் ஒரு ஓட்டுக்கு 2 ஆயிரம் கொடுத்திருக்கிறார்கள். ஆண்டிப்பட்டியில் ஆயிரம்தான் கொடுத்திருக்கிறார்கள். எல்லாமே ஊடகங்களுக்கும் தெரியும். ஆனால், எந்த ஊடகமும் வெளிப்படையாக செய்தி போடுவதில்லை. தேர்தல் ஆணையம், மத்திய அரசின் கீழ் இயங்கும் ஒரு அமைப்பாக மாறி விட்டது.இவ்வாறு தங்கத் தமிழ்ச்செல்வன் கூறினார்.
ஓ.பி.எஸ். மகன் தொகுதியில் அதிருப்தி மலையில் குடியேறும் கிராம மக்கள்!!