பிரச்சாரத்தின் போது சுட்டெரித்தது வெயில்...! தேர்தல் நாளில் குளிர்விக்க வருகிறது மழை...!
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தேர்தல் பிரச்சாரத்தில் அனல் பறந்ததோ இல்லையோ, சூரியன் சுட்டெரித்து வாட்டி வதைத்ததால் மக்கள் வாடி வதங்கினர். இந்நிலையில் பிரச்சாரம் முடிந்து மறுநாளான இன்றும், தேர்தல் நாளான நாளையும் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது மக்களை குளிர்விக்கச் செய்துள்ளது.
இந்த ஆண்டு தமிழகத்தின் பல பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக மார்ச் முதல் வாரத்திலேயே கோடை வெப்பம் 100 டிகிரியை தாண்டி வாட்டி வதைத்தது. இதனால் தீவிர தேர்தல் பிரச்சா ரத்தில் ஈடுபட்ட வேட்பாளர்களும், தலைவர்கள் பலரும் என்றில்லாமல், பிரச்சாரத்தைக் காண அழைத்து வரப்பட்டு கொளுத்தும் வெயிலில், வெட்ட வெளியில் அமர வைக்கப்பட்ட பொதுஜனங்களும் உஷ்ணம் தாங்காமல் படாத பாடுபட்டனர்.
இந்நிலையில் பிரச்சாரம் நிறைவடைந்த மறுநாளான இன்றே தமிழகத்தில் வானிலை நிலவரம் அடியோடு மாறி பல பகுதிகளில் குளிர்ந்த காற்றும் வீச ஆரம்பித்துள்ளது. நெல்லை, ராமநாதபுரம், உதகை, தேனி, கோவை போன்ற பகுதிகளில் மழையும் பெய்கிறது. மேலும் அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் குறிப்பாக தென் மாவட்டங்களில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் தேர்தல் நாளில் மழையில் நனைந்தாலும் பரவாயில்லை, சந்தோஷமாக ஓட்டுப் போடலாம் என்ற உற்சாக மன நிலையில் உள்ளனர் வாக்காள மகா ஜனங்கள்.
தமிழகத்தில் புரோகித் ஆட்சியா? ஆளுநரை வசைபாடிய ராகுல்!!