அந்த நம்பரில் இருந்து அழைப்பு வந்தது..! கனிமொழி வீட்டு ரெய்டுக்கு காரணம் இதுவே...
திமுக வேட்பாளர் கனிமொழி வீட்டில் நடத்தப்பட்ட சோதனை குறித்து விளக்கம் அளித்துள்ளார் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கனிமொழியின் வீட்டில், நேற்று இரவு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். தூத்துக்குடி குறிஞ்சிநகர் 2-வது தெருவில் உள்ள அவரது வீட்டு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது.
வருமான வரித்துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கை, ‘தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை பயமுறுத்துவதற்காக குறிவைத்து வருமான வரித்துறை சோதனை நடத்துகிறது என்றும் தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் தேர்தல் ஏஜண்ட்' என பாஜக-அ.தி.மு.க கூட்டணி மற்றும் தேர்தல் ஆணையத்தையும் விமர்சித்து வருகின்றனர் தி.மு.க, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள்.
இந்நிலையில், கனிமொழி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது குறித்து விளக்கம் அளித்துள்ளார் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ. அதில், ‘தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஒரு தொலைபேசி எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதில், கனிமொழி தங்கியிருந்த வீட்டின் அருகே பணப் பட்டுவாடா நடப்பதாகப் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படியில், வருமான வரித்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கனிமொழி வீட்டில் நடந்த வருமான வரி சோதனையில் எவ்வித பணமும் கைப்பற்றப்படவில்லை’ எனத் தெரிவித்தார்.
உறுதி செய்யப்படாத ஒரு தொலைபேசி அழைப்பைக் காரணமாக வைத்துக் கொண்டு இப்படித் தேர்தல் ஆணையம் செயல்படுவது ஏற்புடையது அல்ல என திமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
தி.மு.க.வை பயமுறுத்த வருமான வரி ரெய்டு! கனிமொழி ஆவேசம்!!