வயநாட்டில் ராஜீவ் காந்தியின் அஸ்தி கரைத்த இடத்தில் ராகுல் காந்தி பூஜை..! தந்தையின் நினைவுகளால் உருக்கம்

கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அத் தொகுதிக்குட்பட்ட திருநெல்லியில் 28 வருடங்களுக்கு முன் தன் தந்தை ராஜீவ் காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்ட இடத்தில் பூஜைகள் செய்தார். அப்போது தந்தை நினைவுகளில் மூழ்கிய ராகுல் அது பற்றி உருக்கமாக டுவிட்டரிலும் பதிவிட்டுள்ளார்.

கேரளாவின் வயநாடு தொகுதிக்குட்பட்ட திருநெல்லி ஆலயம் தென்னகத்து காசி என அழைக்கப்படும் புனிதமான ஆலயம். இங்கு ஓடும் பாபனாசினி ஆறும் கங்கைக்கு இணையான புனித நதியாகும். ராகுல் காந்தி இளம்பிராயத்தில் இருந்த போது, 28 ஆண்டுகளுக்கு முன் 1991-ல் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பின் அவருடைய அஸ்தி பாபனாசினி நதியிலும் கரைக்கப்பட்டது. இன்று வயநாடு தொகுதியில் பிரச்சாரத்திற்கு வந்த ராகுல் காந்தி திருநெல்லிக்கு சென்றார்.

கேரள மக்களின் ஆலய சம்பிரதாயப் படி வேஷ்டி, துண்டு மட்டும் அணிந்தபடி சென்ற ராகுல், பாபனாசினி நதிக்கரையில் தன் தந்தையின் அஸ்தி கரைக்கப்பட்ட இடத்தில் சோகமே உருவாக சில நிமிடங்கள், தந்தையின் நினைவுகளில் மூழ்கினார். பின்னர் திருநெல்லி ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார்.

திருநெல்லி விசிட் குறித்து படங்களுடன் டிவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, அற்புதமான திருநெல்லி ஆலயமும், அதன் சுற்றுப்புற அழகும், அமைதியான சூழலும் ரம்மியமானது. பாபனாசினி நதிக்கரையில் தந்தையின் அஸ்தி கரைத்த இடத்தில் நின்ற போது பழைய நினைவுகளில் மூழ்கி விட்டேன் என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

 

'அமேதியில் ராகுல் காந்தி நெற்றி மீது பட்ட லேசர் ஒளி' - ஸ்னைபர் துப்பாக்கி மூலம் குறி வைக்கப்பட்டாரா? காங். சந்தேகம்
More News >>