மசாஜ் சென்டரை திறக்க லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆணையர் கைது
சென்னையில் மசாஜ் சென்டரை திறக்க லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆணையரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
மசாஜ் சென்டர் என்ற பெயரில் சட்டவிரோத செயல்களை தடுக்க சென்னை பெருநகர மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்கள், முடிதிருத்தும் நிலையங்கள் ஆகியவற்றை நடத்த தொழில் உரிமம் பெறுவது கட்டாயமாக்கியது. மேலும், தொழில் உரிமம் வழங்குவதற்கு முன்பு போலீஸ் விசாரணை நடத்தப்படும்.
இந்நிலையில் சென்னை அசோக் நகரில் இயங்கி வந்த செந்தில்குமரன் என்பவரின் மசாஜ் சென்டரில் முறைகேடான தொழில்கள் நடப்பதாக கூறி அசோக்நகர் காவல் உதவி ஆணையர் வின்சென்ட் ஜெயராஜ் உத்தரவிட்டார். இந்த சூழ்நிலையில், தனது மசாஜ் சென்டரை மீண்டும் திறக்க அனுமதி அளிக்குமாறு செந்தில் குமரன் வின்சென்ட் ஜெயராஜிடம் விண்ணப்பம் செய்துள்ளார். அதற்கு ரூ.50 ஆயிரம் தந்தால் அனுமதி தருவதாக வின்சென்ட் ஜெயராஜ் கூறியுள்ளார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் செந்தில் குமரன் புகார் செய்தார்.
லஞ்ச ஒழிப்புத்துறையினர் யோசனைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை அசோக் நகர் காவல் நிலையத்தில் வைத்து வின்சென்ட் ஜெயராஜிடம் செந்தில் குமரன் கொடுத்துள்ளார். அதனை வின்சென்ட் ஜெயராஜ் வாங்கிய போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் உடனடியாக அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும், உதவி ஆணையருக்கு அரசாங்கம் வழங்கிய வாகனத்திலும் லஞ்ச ஒழிப்புதுறையினர் நடத்தினர். மேலும், பூவிருந்தவல்லியில் உள்ள அவரது வீட்டிலும் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.