கைவிடப்படுமா இந்தியன் 2..! -கமல் பேச்சு, பின்வாங்கும் லைகா...பின்னணி என்ன?
கமல் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2 படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென் இந்தியத் திரை உலகின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் இந்தியன் 2. லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பூஜை அண்மையில் நடந்தது. பின், முதற்கட்ட பணிகளும் தொடங்கி நடந்து வந்தது. ஏனோ சில காரணங்களால், படத்தின் பணிகள் பாதியிலே கைவிடப்பட்டது.
அதற்கு, கமல்ஹாசன் பிஸியாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக முதலில் கூறப்பட்டது. பிறகு, இப்படத்துக்காக எடுக்கப்பட்ட போட்டோ ஷூட்டில் கமலுக்கு மேக்கப் கச்சிதமாகப் பொருந்தியது. ஆனால், படப்பிடிப்பின் போது மேக்கப் சரியாகப் பொருந்தவில்லை. அதோடு, மேக்கப் காரணமாக அவருக்கு அலர்ஜி ஏற்பட்டதால் படப்பிடிப்பு பாதியில் கைவிடப்பட்டது எனப் பல தகவல்கள் வெளிவந்த வண்ணமாக இருக்கிறது.
இந்நிலையில், 350 கோடி பட்ஜெட்டில் உருவாகவிருந்த இப்படத்தின் முதற்கட்ட பணிகள் நடக்காமல் இருப்பதால் லைகா நிறுவனம் அதிருப்தியில் உள்ளதாகவும் அதனால், படத்தில் இருந்து லைகா நிறுவனம் பின்வாங்க முடிவு செய்து புதிய தகவல். இதனால், வேறு தயாரிப்பாளர்களைத் தேடும் முயற்சியில் ஷங்கர் ஈடுபட்டுள்ளதாக கோடம்பாக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சன் பிக்சர்ஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாகவும் கூறப்படுகிறது.
இது இப்படி இருக்க, சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கமல்ஹாசன் ‘இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 படத்தில் இந்திய அரசியல் கருத்தியல்களை சேர்க்க வேண்டும் என்று கூறுகிறார். நான் இப்போது ஒரு படம் செய்து கொண்டிருக்கிறேன் தான். ஆனால், தற்போது என் மனம் மக்கள் மீது திரும்பியிருக்கிறது. ஆகையால், படத்தில் அரசியல் தொடர்பான கருத்தியல்கள் வேண்டுமா? வேண்டாமா? என இயக்குநர் தான் முடிவு செய்ய வேண்டும்’ எனக் கூறினார்.
இந்தியன் 2 படம் குறித்து வெளியாகும் தகவல்களைப் பார்க்கும்போது ஒரு விஷயம் மட்டும் தெளிவாக தெரிகிறது, கமல், நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படம் சிக்கலில் உள்ளது.