மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளி சாத்வி பிரக்யா..பாஜக வேட்பாளர்! -திக்விஜய் சிங்கை எதிர்த்து போட்டி
மாலேகான் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட சாத்வி பிரக்யா பாஜகவில் இணைந்துள்ளார். அதோடு, போபால் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2006-ல் மகாராஷ்டிரா மாலேகான் மசூதி அருகே வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலின் முக்கிய குற்றவாளியாக சாத்வி பிரக்யா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து, குண்டுவெடிப்பு வழக்கு குற்றப்பத்திரிகையில் இருந்து கடந்த 2016ல் பிரக்யா பெயரை தேசிய புலனாய்வு முகமை நீக்கியது.
இந்நிலையில், நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போபாலில் போட்டியிடுகிறார் சாத்வி பிரக்யா சிங் தாக்கூர். இதே தொகுதியில், காங்கிரஸ் சார்பாக முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் போட்டியிடுகிறார். குண்டுவெடிப்பு வழக்கில் விடுதலையாகி வெளியே வந்துள்ள சாத்வி பிரக்யா, பாஜாகவில் இணைந்ததோடு, மத்தியப் பிரதேச மாநிலம் போபால் மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார்.
தன்னுடைய 14 வயதில் துறவறம் பூண்ட பிரக்யா, தீவிர இந்துத்துவா ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.